சிங்கப்பூர்,அக்டோபர் 04-
சிங்கப்பூரின் அரசாங்க அமைப்பும், அரசியலும் எப்போதும் ஊழலற்றதாக இருக்க வேண்டும். பொதுச் சேவை தொடர்பான பொறுப்பில் இருப்போர், நேர்மைக்கான ஆக உயர்வான தரநிலைகளை கொண்டிருப்பது அவசியமாகும் என்று அந்நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் குற்றத்திற்காக சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு நேற்று 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் வோங் வெளியிட்ட அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.
ஈஸ்வரனின் அரசியல் வாழ்க்கை இவ்வாறு முடிவடைந்தது, தமக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“ஒரு நண்பருக்கு, உடன் பணிபுரிபவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது துன்பத்தை அளித்தாலும், தேவை எழும்போது அவ்வாறு செய்வது நம் கடமை. நம் அரசாங்க அமைப்புமுறையும் அரசியலும் எப்போதும் ஊழலற்றதாக விளங்க வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் கறிப்பிட்டுள்ளார்.
பழிச்சொல்லுக்கு அப்பால் பொதுச் சேவையில் உள்ளோர் நடந்துகொள்ள வேண்டும் என்றும் / இது முக்கியமானது, பேரம் பேச முடியாதது என்றும் / அவர் சுட்டினார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.