ஷா ஆலம், அக்டோபர் 04-
அரசாங்க ஊழியர்களில் ஆசிரியர் துறையைச் சேர்ந்தவர்களே அதிகளவில் போலி மருத்துவச்சான்றிதழ் கொடுத்து, விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர் என்று கூறப்படும் குற்றச்சாட்டை கல்வி அமைச்சு கடுமையாக கருதுவதாக அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.
அண்மையில் தகவல் சாதனங்களில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு, பொறுப்பற்ற அறிக்கையாகும் என்பதுடன் ஆசிரியர் தொழில்துறைக்கு எதிராக எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ஃபத்லினா சிடெக் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் தற்போது 4 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் முழு பொறுப்புடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றி வருகின்றனர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உண்மைலேயே இது போன்ற கண்மூடித்தனமான குற்றச்சாட்டு முன்வைக்கக்கூடாது. பொதுச் சேவை நிர்வாகம், மக்களுக்கு மிகச்சிறந்த சேவை வழங்குவதை உறுதி செய்வதற்கு அவற்றின் பணித்தன்மை அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.