ஜார்ஜ் டவுன், அக்டோபர் 04-
போலீஸ்காரரை நோக்கி ஆபாச சொற்களால் திட்டியதுடன் கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் ஆடவர் ஒருவர், பினாங்கு ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
25 வயது கோ வெங் கியோங் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் நத்ரதுன் நைம் முகமது சைதி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த ஆடவர், நேற்று முன்தினம் புதன்கிழமை பினாங்கு, அயர் ஈதம், ஜாலான் தியான் தேய்க் என்ற இடத்தில் பேருந்து நிலையத்தின் முன் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிவப்பு நிற சாலை சமிக்ஞை விளக்கை மீறி, மோட்டார் சைக்கிளை செலுத்தியதற்காக அந்த நபரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீஸ்காரர் 40 வயது நிக் மிஹம்மது பைசல் நிக் லாங் என்பவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அந்த நபரின் இந்த செய்கை தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வைரலாகி வரும் வேளையில் அந்த நபர் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டர்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த நபர் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 8 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார்.