பாராங் முனையில் 6 லட்சம் வெள்ளி பொருட்கள் கொள்ளை / ஓர் இந்தியரின் பங்களா வீட்டில் கும்பல் அராஜம்

கிள்ளான், அக்டோபர் 04-

ஓர் இந்தியரின் பங்களா வீட்டிற்குள் பாராங்குடன் நுழைந்த 10,12 பேரை உள்ளடக்கிய முகமூடிக்கும்பல் ஒன்று, வீட்டில் இருந்த மாது ஒருவர் உட்பட மூவரை கட்டிப்போட்டப் பின்னர் சுமார் 6 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் அந்த பங்களா வீட்டில் இருந்த நபர் ஒருவரை அந்த கும்பல் பாராங்கினால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம், நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கிள்ளான், பண்டமாரானில் உள்ள ஒரு பங்காள வீட்டில் நிகழ்ந்துள்ளது.

அந்த 10,12 பேர், Toyota Vios மற்றும் Honda Civic ரக இரு கார்களில் வந்துள்ளனர். அவ்விரு கார்களையும் அந்த பங்களா வீட்டின் வேலி சுவருக்கு வெளியே நிறுத்தி விட்டு, மூன்று, நான்கு நாய்கள் குரைக்கும் சத்தத்தையும் பொருட்படுத்தாமல் சுவர் ஏறி மூன்று மாடிகளைக் கொண்ட அந்த பங்களா வீட்டிற்குள் நுழைந்துள்ளனர் என்று தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Cha Hoong Fong தெரிவித்தார்.

கொள்ளையர்கள் வருகையைக் கண்டு, வீட்டின் உரிமையாளர் என்று நம்பப்படும் மாது ஒருவர் மின்னல் வேகத்தில் வீட்டின் அறைக்குள் நுழைந்து, கதவை தாழிட்டக்கொண்ட நிலையில் கதவை உடைத்துக்கொண்டு அந்த அறைக்குள் சம்பந்தப்பட்ட பாராங் கும்பல் நுழையும் காட்சி, அந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளதாக ACP Cha Hoong Fong குறிப்பிட்டார்.

இதில். வீட்டில் இருந்த 37 வயது ஆடவருக்கு பாராங் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுமார் அரை மணி நேரம் வீட்டை அலசி ஆராய்ந்ததில் ரொக்கப் பணம், சாமி சிலைகள், நகைகள் என சுமார் 6 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை அந்த கொள்ளைக் கும்பல் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

காயமுற்ற அந்த ஆடவர் தற்போது கிள்ளான் பந்தாய் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தகவல் கொண்டுள்ளவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ளுமாறு ACP Cha Hoong Fong கேட்டுக்கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS