ஷா ஆலம், அக்டோபர் 05-
ஷா ஆலாம், செக்ஷன் 7 இல் வீற்றிருக்கும் ஷா ஆலாம் ஏரிப்பூங்காவில் மீண்டும் முதலை தலைகாட்டத் தொடங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலான தகவலை சிலாங்கூர் மாநில தேசிய வனவிலங்குப் பூங்கா பாதுகாப்புத்துறை இயக்குநர் வான் முகமது அடிப் வான் முகமட் யூசோ மறுத்துள்ளார்.
நேற்று காலை 10.00 மணியளவில் அதிகாரிகள் அங்கு விரிவான சோதனையை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில் முதலை இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியோ, தடயமோ இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விரிவான சோதனையில், அந்த ஏரிப்பூங்காவில் தூண்டிலில் மீன் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள பொது மக்களிடம் கேட்ட போது, முதலை நடமாட்டத்திற்கான எந்தவொரு தடயமும் காணப்படவில்லை என்று எதிர்வினையாற்றியுள்ளதாக என்று அவர் விளக்கினார்.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் 4 ஆம் அந்த ஏரிப்பூங்காவில் இரவு 10.20 மணியளவில் 20 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று பிடிபட்டதைத் தொடர்ந்து தற்போது புதியதாக பீதி கிளப்பப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எனினும் அந்த ஏரிப்பூங்காவில் உடும்பு இருப்பதற்கான சாத்தியத்தை வான் முகமது அடிப் மறுக்கவில்லை.