கோலாலம்பூர், அக்டோபர் 08-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் செட்டிங் முறை வாயிலாக சோதனையின்றி அந்நியத்தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழையவிட்ட சம்பவம் தொடர்பில் 50 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பிடிபட்டுள்ள வேளையில் தற்போது மருத்துவ விசா மோசடியிலும் சில அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
செட்டிங் முறை குறித்து அதிகமாக பேசப்பட்ட நிலையில் குடிநுழைவுத்துறையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவ விசா மோசடி கும்பல் சம்பந்தப்பட்ட விவகாரத்திலும் சில முக்கிய அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக திடுகிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்துறை அமைச்சு மற்றும் குடிநுழைவுத்துறை ஆகியவற்றின் தகவல்களின்படி குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள், மருத்துவ விசா மோசடி கும்பல் தொடர்பில் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையை அரசு அமலாக்க ஏஜென்சிகளை கண்காணித்து வரும் EAIC எனப்படும் நேர்மை ஆணையம் விசாரணை செய்து வருவதாக அந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.