பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 08-
உணவகத்தை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் துடைப்பத்தைக்கொண்டு, சோற்றுப்பானைகளையும், இதர தட்டுமுட்டு சாமான்களையும் கழுவிக் கொண்டு இருந்த மாமக் உணவகம் ஒன்றின் பணியாளரின் செயல் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து அந்த உணவக நடத்துநரை வலைத்தளவாசிகள் வறுத்து எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கு சுத்தமும் சுகமும் தரக்கூடிய சுகாதார மிக்க உணவு சேவையில் ஈடுபட வேண்டிய உணவகத்தார், பொறுப்பற்ற முறையில் அசுத்தம் நிறைந்த சூழலில் இப்படி சோற்றுப்பானைகளை துடைப்பதால் கழுவிக்கொண்டு இருந்த அருவருக்கத் செயல் மக்கள் மத்தியில் மிகுந்த முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகாங், Lipis-ஸில் உள்ள ஒரு மாமக் உணவகத்தில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் இச்சம்பவம் குறித்து லிப்பிஸ் மாவட்ட மன்றம் முழு வீச்சில் விசாரணை செய்து வருவதாக அதன் தலைவர் டத்தோ முகமட் ஹபிசி இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த மாமக் உணவகத்தின் உரிமையாளர் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இத்தகைய அருவருக்கத்தக்க செயலில் அந்த உணவகத்தார் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
விசாரணைக்கு ஏதுவாக அந்த மாமக் உணவகத்தை இரண்டு வாரங்களுக்கு மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டத்தோ முகமட் ஹபிஸி குறிப்பிட்டார்.
சோற்றுப்பானைகளை சுத்தம் செய்யும் அந்த துடைப்பம் கழிப்பறைக்கும் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இன்று காலையில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த காணொளியை காலை 11 மணிக்குள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுட்டுள்ளனர். 613 பேர் likes செய்துள்ளனர். 675 பேர் அந்த அந்த மாமக் உணவகத்தை வறுத்தெடுக்கும் வகையில் கருத்து பதிவேற்றம் செய்துள்ளனர்.