பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 09-
மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் மருத்துவ விசா மோசடிக்கும்பல் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக EAIC எனப்படும் அமலாக்க முகமை நேர்மை ஆணையம், குடிநுழைவுத்துறையின் பயணிகள் விசாவிற்கான 156 அங்கீகார கோப்புகளை கைப்பற்றியுள்ளது.
கடந்த அக்டோபர் முதல் தேதி குடிநுழைவுத்துறை தலைமையகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கோாப்புகள் யாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குடிநுழைவுத்துறை அதிகாரிகள், நிர்ணயிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் அந்நிய நாட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான விசா மூலம் அந்நிய நட்டவர்களை நாட்டிற்குள் நுழையவிட்ட மோசடி தொடர்பில் குடிநுழைவுத்துறையில் EAIC ஆணையம் முழு வீச்சில் விசாரணை செய்து வருகிறது.
ஏற்கனவே செட்டிங் முறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பில் 50 அதிகாரிகள் உட்பட 60 தனிநபர்களை கைது செய்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்கான விசா மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்நிய நாட்டவர்கள் மலேசியாவில் சிகிச்சைப்பெறுவதற்காக அவர்களுக்கு மருத்துவ விசா வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த ஆண்டில் ஒரே மாநிலத்திற்கு 20 ஆயிரம் மருத்துவ விசா வழங்கப்பட்டுள்ளதாக SPRM கண்டுபிடித்தள்ளது.
இதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினர், அந்நிய நாட்டவர்களுக்கு நபர் ஒருவருக்கு 4 ஆயிரத்து 500 வெள்ளியை கட்டணமாக வசூலித்துள்ளனர். இந்த சட்டவிரோதக் கும்பல், இதன் வாயிலாக 80 லட்சம் வெள்ளி வரை சம்பாதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.