கோலாலம்பூர், அக்டோபர் 09-
மனபாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் மாது ஒருவர் தாம் தங்கியிருந்த PPR அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் 6 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் குவாந்தன் அருகில் தஞ்சோங் லம்பூர், பாக் மஹத், பிபிஆர் பொது குடியிருப்புப்பகுதியில் நிகழ்ந்தது.
தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த மாது, சம்பவ இடத்திலேயே மாண்டதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
27 வயதுடைய அந்த மாது மிகுந்த மனக் குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆறாவது மாடியிலிருந்து கீழே குதிப்பதற்கு முன்னதாக அவர் அந்த ஆறாவது மாடியில் அங்கும், இங்கும் நடந்து கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக ஏசிபி வான் முகமட் குறிப்பிட்டார்.
அந்த மாது, மனநலப்பாதிப்பு தொடர்பாக குவந்தான் தேங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வந்துள்ளார் என்று மருத்துவக் குறிப்பு காட்டுவதாக அவர் மேலும் கூறினார்.