மலாக்கா,அக்டோபர் 09-
தனது முன்னாள் காதலனுக்கு பாலியல் ரீதியாக அவமதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமூக வலைத்தளங்களில் கண்ணியக்குறைவான தகவல்களை பதிவேற்றம் செய்தது தொடர்பில் முன்னாள் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மலாக்கா, அயர் கெரோஹ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
42 வயது நூர்பதேஹா ஓத்மான் என்ற அந்த பெண் பத்திரிகையாளர் மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
43 வயது முகமது ஜுஹைரி ஹுசைன் என்ற தனது முன்னாள் காதலன் WhatsApp புலனத்தில் அந்தரங்கமாக பகிர்ந்து கொண்ட தனிப்பட்ட விஷயங்களையும், பதிவேற்றம் செய்த புகைப்படங்களிலும் கடந்த ஜனவரி மாதம் முற்பகுதியில் தனது முகநூலில் பதிவேற்றம் செய்து, கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக அந்தப் பெண் பத்திரிகையாளர் குற்றம் சுமத்தப்பட்டார்.
மலாக்கா தெங்கா மாவட்டம் , புக்கிட் கட்டில், தமன் சௌஜானா செக்சியன் 2 இல் அந்தப் பெண் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.