கோலாலம்பூர், அக்டோபர் 09-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் ஆய்வியல் உதவியாளரும், பிரதமருக்கு எதிராக சிவில் வழக்கை தொடுத்து இருப்பருமான முஹம்மது யூசப் ராவ்தர்- க்கு எதிராக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று மேலும் ஒரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
கைவிலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட 31 வயது யூசஃப் ராவ்தர் , மாஜிஸ்திரேட் S. மகேஸ்வரியின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, இரண்டு போலி துப்பாக்கிகளை வைத்திருந்ததாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
யூசஃப் ராவ்தர் , கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 9.25 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் புக்கிட் கியாரா-வில் ஆடம்பர அடுக்குமாடி வீடொன்றின் அருகில் உள்ள சாலையில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது 5 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1960 ஆம் ஆண்டு ஆயத சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
இதற்கு முன்பு போதைப்பொருள் வைத்திருந்ததாக கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் யூசஃப் ராவ்தர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
யூசஃப் ராவ்தர்- க்கு ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை. இவ்வழக்கு விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மாஜிஸ்திரேட் மகேஸ்வரி அறிவித்தார்.