புத்ராஜெயா,அக்டோபர் 09-
28 லட்சம் வெள்ளியை சட்டவிரோதமாக பெற்றதாக லஞ்ச ஊழல் வழக்கில் சபா அம்னோ தலைவர் பங் மொக்தார் மற்றும் அவரின் துணைவியார் ஜிஸி இசெட் அப்துல் சமத் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கில் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் வரும் நவம்பர் 18 ஆம் தேதி தீர்ப்பளிக்கவிருக்கிறது.
கினபாத்தங்கன் நாடாளுமன்ற உறுப்பினரான பங் மொக்தார் மற்றும் அவரின் துணைவியார் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் கே.குமரேந்திரன், எம். ஆதிமூலம் மற்றும் பிராசிகியூஷன் தரப்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் மசியா மொஹைட் ஆகியோரின் வாதத் தொகுப்புகளை செவிமடுத்தப்பின்னர் அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவித்தது.
இது பொது மக்கள் நலன் சார்ந்த வழக்கு என்பதால் தீர்ப்பு விரைவில் அளிக்கப்படும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி அஹ்மத் ஜைதி இப்ராஹிம் இன்று காலையில் தெரிவித்தார்.