ஈப்போ , அக்டோபர் 10-
வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, அழைப்பு மையம் மூலம் தொலைபேசி அழைப்பு சேவையில் ஈடுபட்டு வந்த 20 அந்நிய நாட்டவர்கள் ஜோகூர்பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக ஒரு நிறுவனமே இல்லாத நிலையில் அந்த நிறுவனம் செயல்படுவதைப் போல் பொது மக்களிடம் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் அந்த இருபது அந்நிய நாட்டவர்களும், மாஜிஸ்திரேட் ஹிதாயத்துல் ஸுஹதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
இவர்கள் அனைவரும் இஸ்கந்தர் புத்தேரி, ஹொரைசன் ஹில்ஸ்-ஜில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 6 மாத சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டத்தின் கீழ் 20 பேரும் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்பினர்.
இதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் ஹிதாயத்துல் ஸுஹதா அனைவருக்கும் ஹிதாயத்துல் ஸுஹதா தலா 8 ஆயிரம் வெள்ளி அபராதத்தை விதித்தார்.