ஈப்போ , அக்டோபர் 10-
சக நாட்டவர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் வங்காளதேச ஆடவர் ஒருவர், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பேரா, தெலுக் இந்தான், தமன் லாஜெண்டா பாசா 3 இல் ஒரு கொங்சி வீட்டில் இன்று காலை 5 மணியளவில் அந்த வங்காளதேசி இறந்து கிடந்தது தெரியவந்தது.
கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த அந்நிய ஆடவரின் நெஞ்சுப்பகுதியில் ஆழமானவெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அந்த வங்காளதேசியுடன் ஒன்றாக தங்கியிருந்தவர்கள் என்று நம்பப்படும் 32 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று வங்காளதேச ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொலை செய்யப்பட்ட நபரின் உடல், சவப்பரிசோதனைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக டத்தோ அசிசி மேலும் கூறினார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.