6 வயது வளர்ப்பு மகனை அடித்து காயப்படுத்தியதாக திருநங்கை மீது குற்றச்சாட்டு

செரம்பன்,அக்டோபர் 10-

தனது ஆறு வயது வளர்ப்பு மகனை அடித்து, உடல் ரீதியாக காயப்படுத்தியதாக திருநங்கை ஒருவர், சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

35 வயது S. அசோாக்குமார் என்ற அந்த திருநங்கை, நீதிபதி மேயர் சுலைமான் அகமது முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்டது.

அந்த 6 வயது சிறுவனை தத்தெடுத்தவர் என்ற முறையில் அவனை முறையாக பராமரிக்காமல், அடித்து துன்புறுத்தியதுடன், அவனது காலை முறித்ததாக அந்த திருங்கை மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் இக்குற்றத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி பிற்பகல் 7.30 மணியளவில் போர்ட்டிக்சன், ஜாலன் தேசா ரூசா, பத்து 4 ( பத்து அம்பாட்டில் ) உள்ள ஒரு வீட்டில் புரிந்ததாக அந்த திருநங்கைக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த திருநங்கை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட சிறுவனை தொடர்பு கொள்ள முயற்சி செய்த அவனை ஏற்கனவே பராமரித்து வந்த மூதாட்டி ஒருவர், கடைசி வரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தார்.

போலீசார் மேற்கொண்ட சோதனையில் சம்பந்தப்பட்ட வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தாக நம்பப்படும் அந்த ஆறு வயது, உடலில் ஓர் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் உடலில் காயங்களுடன் காணப்பட்ட நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டான். அந்த சோதனையின் போது ஒரு பெண் மற்றும் இரண்டு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை அந்த திருநங்கை மறுத்து விசாரணை கோரினார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திருநங்கைக்கு ஜாமீன் அனுமதிக்கக்கூடாது என்று துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர் நூர் சியாஃபினா முகமது ரட்சுவான் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

அந்த ஆறு வயது சிறுவனுக்கு எதிராக அந்த திருநங்கை புரிந்துள்ள குற்றம் கடுமையானது என்று அவர் வாதிட்டார்.

எனினும் அந்த திருநங்கை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டினேஷ் முத்தால், ஒரு முக ஒப்பனைப் பணியாளான அசோக்குமார், ஒரு திருநங்கை என்றும் மனோரீதியாக பாதிக்கப்பட்ட தனது தாாயரைப் பராமரிக்கும் பொறுப்பில் இருப்பதாகவும் குறைந்த ஜாமீன் தொகை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பின் வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி மேயர் சுலைமான் அகமது, ஒரு நபர் உத்தரவாதத்துடன் 7 ஆயிரம் வெள்ளி ஜாமீன் அனுமதிக்கப்படுவதாகவும் வழக்கு முடியும் வரையில் ஒவ்வொரு மாதமும் போர்ட்டிக்சன் போலீஸ் நிலையத்தில் அந்த திருநங்கை ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அந்த திருநங்கையுடன் பிடிபட்ட ஒரு ஹோட்டல் பணியாளரான 36 வயது T.C. பீட்டர் என்பவர், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அந்த ஆறு வயது சிறுவனை அடித்து காயம் விளைவித்தாக மற்றொரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

எனினும் அந்த நபர், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 20 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

WATCH OUR LATEST NEWS