புத்ராஜெயா,அக்டோபர் 10-
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷா ஆலாம், புன்சக் ஆலம்-மில் மங்கோலியா நாட்டின் முன்னாள் மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபு- வை கொலை செய்தற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போலீஸகாருக்கு எதிரான தண்டனை ரத்து செய்யப்பட்டு, 40 ஆண்டு சிறையும் 12 பிரம்படித் தண்டனையும் விதிக்கப்பட்டு இருப்பது, ஒரு நியாயமான தீர்ப்பே என்று அல்தான்துயா குடும்ப வழக்கறிஞரான சங்கீத் கவுர் தியோ கர்பால் சிங் வர்ணித்துள்ளார்.
அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த முன்னாள் அதிரடி போலீஸ் அதிகாரியானஅஜிலா ஹத்ரி என்பவருக்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று சிறைத் தண்டனை விதித்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் சங்கீத் கவுர் இதனை தெரிவித்தார்.
அந்த மங்கோலியப் பெண்ணின் தந்தை ஷாரிபு சேதேவ் , மனித உயிரின் புனிதத்தன்மை உணர்ந்த ஒரு மனிதர் ஆவார். ஓர் உயிர் காவு வாங்கப்பட்டதற்கு தீர்வு, மற்றொரு உயிரை பறிப்பது அல்ல என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவர். எனவேதான் தனது மகளுக்கு எதிராக அந்த அதிரடி போலீஸ் அதிகாரி புரிந்த கொலை குற்றத்தை மன்னிப்பதாக எழுத்துப்பூர்வமான கடிதத்தை கூட்டரசு நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளார்.
அந்த முன்னள் போலீஸ் அதிகாரி தனக்கு எதிரான தூக்குத்தண்டனை ரத்துசெய்யப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று செய்து கொண்ட மேல்முறையீட்டிகு அல்தான்துயா குடும்பத்தினர் வழங்கிய கடிதம், தண்டனையை குறைப்பதற்கு பெரிதும் உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.