பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 10-
சீனாவின் இரண்டு போர்க்கப்பல்கள், பினாங்கு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று அரசாங்கப் பேச்சாளர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்கள், மலேசிய துறைமுகங்களில் பெரும்பாலும் நிறுத்தப்படுவதுண்டு. அவை தற்காப்பு அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் வெளியுறவு அமைச்சான விஸ்ம புத்ரா – நிர்ணயித்துள்ள நெறிமுறைகளுக்கு ஏற்ப நிறுத்தப்படுகின்றன என்று தொடர்புத்துறை அமைச்சரான ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவில் இருந்தும் போர்க்கப்பல்கள் நமது துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு இருந்ததையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
போர்க்கப்பல்கள் அவ்வாறு நிறுத்தப்படும் போது சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரங்கள் நம்முடன் தொடர்பு கொண்டு அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிப்பது வழக்கமாகும் என்று ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்.