மகனை கொன்ற தந்தை, தூக்கிலிருந்து தப்பினார்

புத்ராஜெயா,அக்டோபர் 10-

17 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த மகனை கொன்று, உடலை துணிப்பெட்டிக்குள் மறைத்து, ஆற்றில் வீசிய குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை இன்று சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, சிறைத் தண்டனையாக மாற்றப்பட வேண்டும் என்று 46 வயது எம். மூர்த்தி என்ற அந்த தந்தை செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

எனினும் அந்த நபருக்கு 40 ஆண்டு சிறையும், 12 பிரம்படித் தண்டனையும் விதிப்பதாக வழக்கு விசாரணையை செவிமடுத்த நாட்டின் தலைமை நீதிபதி தேங்கு மைமும் துவான் மாட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி கிள்ளான் அருகில்ஜாலான் கபார், சுங்கை கபார்என்ற இடத்தில் உள்ள வீட்டில் தனது 2 வயது மகன் எம். ரூத்ரனை கொலை செய்த குற்றத்திற்காக மூர்த்திக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் மூர்த்தியின் மனைவி கே. செல்வியின் வாக்குமூலம் முக்கிய ஆதாரமாக நீதிமன்றத்தில் ஏற்றுக்கெள்ளப்பட்டது.

தனது கணவர் மூர்த்தி, தனது இரண்டு வயது மகன் ருத்ரனின், உயிர் போகும் வரையில் அவனது தலையை காலால் மிதித்து, கதறி துடிக்க துடிக்க கொன்ற காட்சி தன் கண் எதிரிலேயே நடந்ததாக மனைவி செல்வி சாட்சியம் அளித்து இருந்தார்.

WATCH OUR LATEST NEWS