ஈப்போ , அக்டோபர் 11-
கடந்த மாதம் குடிநுழைவுத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக வங்காளதேசப் பிரஜையான நாசி கந்தர் உணவக உரிமையாளர் ஒருவருக்கு ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 30 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
37 வயது ரெசால் ஷாஜஹான் என்ற அந்த வங்காளதேச ஆடவர்ர், நீதிபதி டத்தோ இப்ராஹிம் ஒஸ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, தனக்கு எதிரான குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
தனக்கு விதிக்கப்பட்ட 30 ஆயிரம் வெள்ளி அபராதத்தொகையை செலுத்த அந்த உணவக உரிமையாளர் தவறுவாரோயால் அவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அந்த நபர், கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி ஈப்போ, பந்தர் மேரு ராயா, பெர்சியரான் மேரு உத்தமா -வில் உள்ள உள்துறை அமைச்சின் கட்டடத்தில் உள்ள குடிநுழைவுத்துறை அலுவலகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனது நாசி கந்தர் உணவகத்தில் வேலை செய்து வந்த 13 அந்நிய நாட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு குடிநுழைவுத்துறை அதிகாரியிடம் பத்தாயிரம் வெள்ளி லஞ்சம் கொடுத்ததாக அந்த வங்காளதேச ஆடவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.