ஷா ஆலம், அக்டோபர் 11-
மங்கோலியா முன்னாள் மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபு படுகொலையில் தாம் சம்பந்தப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அந்த மங்கோலியப் பெண்ணை தாம் பார்த்ததோ அல்லது அவரை சந்தித்ததோ இல்லை என்று குறிப்பிட்ட நஜீப், அவரை கொலை செய்யும்படி எந்த சமயத்திலும் தாம் உத்தரவு பிறப்பித்தது கிடையாது என்று இன்று வெள்ளிக்கிழமை ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் நஜீப் தெளிவுபடுத்தினார்.
முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ டாமி தாமஸ் எழுதிய MY STORY: JUSTICE IN THE WILDERNESS எனும் நூலின் ல் 44 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டு இருப்பதைப் போல *அல்தான்துயா உங்களுக்கு தெரியுமா? அவரை பார்த்தீர்களா? என்று தமது வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் சாட்சிக்கூட்டில் அமர்ந்தவாறு மேற்கண்ட பதிலை நஜீப் வழங்கினார்.
தமக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அல்தான்துயா கொலை வழக்கில் தமது பெயரை டாமி தாமஸ் தொடர்புபடுத்தியுள்ளார் என்று கூறி, அந்த முன்னாள் சட்டத்துறை தலைவருக்கு எதிராக நஜீப் தொடுத்துள்ள அவதூறு வழக்கு இன்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.
வழக்கு விசாரணையின் முதல்நாளான இன்று, வழக்கின் வாதி என்ற முறையில் நஜீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது..
அந்த சர்ச்சைக்குரிய நூலில் அல்தான்தயா கொலையுடன் தம்மை தொடர்புபடுத்தி டாமி தாமஸ் எழுதிய குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என்றும், அவற்றில் உண்மையில்லை என்றும் நஜீப் தமது சாட்சியத்தில் வாதிட்டார்.