கோலாலம்பூர், அக்டோபர் 12-
மலேசிய நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் மகத்தான சக்தி, விளையாட்டுத் துறைக்கும் உண்டு என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபிடின் நசுஷன் இஸ்மாயில் வர்ணித்துள்ளார்.
இன்று அக்டோபர் 12 ஆம் தேதி சனிக்கிழமை நாடு தழுவிய நிலையில் தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி அலோர்ஸ்டார், மலேசிய வட மாநில பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கெடா மாநில அளவிலான தேசிய விளையாட்டுத் தினத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ சைபுடின் இதனை தெரிவித்தார்.
மலேசியாவில் தேசிய விளையாட்டுத் தினம் கடந்த 2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமையில் தேசிய விளையாட்டத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வருட தேசிய விளையாட்டுத் தினத்தின் கருப்பொருள்” CERGAS BERSAMA” என்பதாகும். மலேசியர்கள் தங்கள் வாழ்க்கை நடைமுறையில் விளையாட்டும், ஓர் அங்கமாக இருக்க வேண்டும். அது வாழ்நாள் புறப்பாட நடவடிக்கையாக இருக்க வேண்டும். இதன் மூலம் உடல் ஆரோக்கியத்துடன் வளமாக வாழ்க்கையை நோக்கி பயணிக்க வேண்டும், உடற்பயிற்சிக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்ற ஓர் உன்னத இலக்குடன் தேசிய விளையாட்டுத்தினம் அறிமுகப்படுத்தப்பட்டதாக சைபுடீன் குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் சுகாதாரத்துடனும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கவும் உடற்பயிற்சிகள் அவசியமாகும். அந்த வகையில் கெடா மாநிலம் தம்முடைய மாநிலம் என்பதால் இன்று தேசிய விளையாட்டுத் தினத்தை தொடக்கி வைப்பத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக சைபுடீன் குறிப்பிட்டார்.
தேசிய விளையாட்டுத் தினத்தன்று மட்டும் உடற்பயிற்சிகள் செய்துவிட்டு மீதம் இருக்கும் 364 நாட்கள் உடபயிற்சிகள் செய்யாமல் இருப்பது தவறாகும் என்பதையும் சைபுடீன் சுட்டிக்காட்டினார்.
தேசிய விளையாட்டுத்தினத்தையொட்டி மலேசிய வட மாநில பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பயிற்சி, மெதுஓட்டம் மற்றும் மிதிவண்டி சவாரி என நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் பொது மக்கள் சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டு இருப்பது, விளையாட்டுத்துறை என்பது நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலும்படுத்தும் மகத்தான சக்தியாக மாறியுள்ளது என்று சைபுடீன் வர்ணித்தார்.