பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 12-
மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் இளம் பெண்ணை மானபங்கம் செய்ததாக கூறப்படும் போலீஸ் துறையைச் சேர்ந்த ஒரு ஏஸ்பி அதிகாரி மற்றும் இதர ஆறு போலீஸ்காரர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர், செராஸில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீட்டில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் இதர மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்து இருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் முதல் தேதி நடந்ததாக கூறப்படும் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் தம்மை மிரட்டி பணம் பறித்ததுடன், மானபங்கம் செய்ததாக 22 வயது பெண், கடந்த அக்டோர் 7 ஆம் தேதி அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.
இப்புகாரைத் தொடர்ந்து முதலில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
அந்த மூன்று நபர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்பபடையில் ஏஸ்பி அந்தஸ்தில் உள்ள ஒரு போலீஸ் உயர் அதிகாரியையும், ஆறு போலீஸ்காரர்களையும் தாங்கள் கைது செய்து இருப்பதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.
பிடிபட்டுள்ள 7 போலீஸ்காரர்களும் செராஸ் மாவட்ட போலீஸ் நிலையத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
கைது செய்யப்பட்டுள்ள 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய போலீஸ்காரர்களில் ஒரு பெண் போலீஸ்காரரும் அடங்குவர்.
இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுத் தின நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ருஸ்டி இதனைத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் 384 மற்றும் 354 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில் அந்த 7 போலீஸ்காரர்களும் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.