கோலாலம்பூர், அக்டோபர் 12-
மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி விழாவும், சரஸ்வதி பூஜையும் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சை தாம் கேட்டுக்கொண்டதாக கூறி, இயக்கத்தின் சின்னம் மற்றும் தம்முடைய புகைப்படத்துடன் சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாகபஞ்சு மறுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த செய்தி தொடர்பிலான போஸ்டரையோ அல்லது அதில் உள்ள கருத்தையோ மலேசிய மாந்த நேய திராவிடர் கழகம் பகிரவில்லை என்று நாகபஞ்சு , திசைகளுக்கு அளித்த விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தங்கள் மீது கொண்டுள்ள வன்மத்தின் காரணமாக யாரோ இந்த பொய் செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை யார் செய்தார் என்பது குறித்து தங்களுக்கு தெரியாது என்றும், இதனை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் நாகப்பஞ்சு தமது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் என்ற முறையில் தம்மையும், தமது இயக்கத்தின் பெயரையும் தொடர்படுத்தி, பொய் செய்தியை பதிவேற்றம் செய்த தரப்பினர் குறித்து விசாரணை நடத்துமாறு கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் தாங்கள் புகார் அளித்து இருப்பதையும் தமது விளக்கத்தில் நாக பஞ்சு சுட்டிக்காட்டியுள்ளார்.