பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 14-
சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் இருதய நோயாளிகளுக்கு தேசிய இருதய சிகிச்சைக்கழகமான IJN, தனது கட்டணத்தை 10 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்த முன்வைக்கப்பட்ட யோசனை / குறைந்த வருமானம் பெறுகின்ற சாமானிய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று மருந்தக கல்வியல் நிபுணர் கூறுகிறார்.
அதிகரித்து வரும் பண வீக்கமும், மருத்துவமனையை நடத்துவதற்கான செலவினங்களும் உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு இருதய நோயாளிகளுக்கான சிகிச்சை கட்டணத்தை உயர்த்தவதற்கு அந்த நிபுணத்துவ மருத்துவமனை உத்தேசித்துள்ளது.
இந்நிலையில் IJN- னின் இந்த பரிந்துரை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று Monash பல்கலைக்கழகத்தின் மருந்தகப் பள்ளியின் முதிர் நிலை விரிவுரையாளர் Mark Cheong கூறுகிறார்.
இந்த கட்டண உயர்வினால் நோயாளிகளில் குறிப்பாக வசதி குறைந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு அந்த நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படலாம் என்று அவர் கூறுகிறார்.
குறிப்பாக, IJN பரிந்துரைக்கக்கூடிய கட்டணத்தொகையை திரட்டுவதற்காக அந்த நோயாளி வெகு காலம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகலாம். இது அவரை, இறுதியில் துர்ப்பாக்கிய நிலைக்கு கொண்டு செல்லப்படலாம் என்று Mark Cheong குறிப்பிடுகிறார்.
நோயாளிகளில் பெரும்பாலும் இருதயக் நோய்க்கு ஆளாகி, ஆபத்தான நிலையில் இருக்கும் பட்சத்திலேயே தங்களின் கடைசித் தேர்வாக IJN –னில் சிகிச்சை பெற முடிவு செய்கின்றனர். அத்தகைய சூழலில் உயர்வு காணவிருக்கும் சிகிச்சைக்கட்டணத்தை திரட்டுவது என்பது மிக சிரமான ஒன்றாகும் என்று அந்த மருந்தக கல்வியல் நிபுணர் கூறுகிறார்.
இதன் தொர்பில் IJN-னில் சிகிச்சைக் கட்டண உயர்வு உத்தேசத்திட்டத்தை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்.