லஹாட் டத்து ,அக்டோபர் 14-
முதலையால் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும்
பத்து வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த கோரச் சம்பவம் சபா, டத்து லஹாட், பனை சினகுட் என்ற இடத்தில் நேற்று நிகழ்ந்தது.
டெனிஸ் ரோடி என்ற சிறுவனின் தலை மற்றும்
வலது கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை 9.26
மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக டஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி துல்பஹாரின் இஸ்மாயில் கூறினார்.
இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னர், அச்சிறுவன் தனது ஐந்து சகாக்களுடன் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அப்போது திடீரென அங்கு தோன்றிய முதலை அச்சிறுவனை கவ்விக்
கொண்டு நடு கடலுக்கு இழுத்துச் சென்றது. குடும்பத்தினரும் பொது
மக்களும் அச்சிறுவனைத் தேட மேற்கொண்ட முயற்சி
பலனளிக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ
இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பொது மக்கள் உதவியுடன்
அச்சிறுவனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் அச்சிறுவனின்
உடல் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.