அக்டோபர் 14-
இந்திய கூட்டுறவுக்கழகங்களின் செயல்பாடுகள், முதலீட்டுத் திட்டங்கள், கிடைக்கக்கூடிய வாய்ப்புகள், மானியங்கள், கடன் உதவித் திட்டங்கள் போன்றவற்றை விரிவாக தெரிந்து கொள்வதற்கு SKM எனப்படும் மலேசிய கூட்டுறவுக் கழக ஆணையத்துடன் இணைந்து செயலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனின் தனிச்செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் பரிந்துரை செய்துள்ளார்.
கோலாலம்பூரில் பேங்க் ராக்யாட் இரட்டைக் கோபுர மண்டபத்தல் நேற்று நடைபெற்ற இந்திய கூட்டுறவுக் கழக மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றுகையில் டத்தோ அன்புமணி இந்த பரிந்துரையை முன்வைத்தார்.
கூட்டறவுக்கழகங்களுக்கென பயிற்சித்திட்டங்கள் நிறைய உள்ளன. ஆனால், இதில் இந்திய கூட்டுறவுக் கழகங்களின் பங்கேடுப்பு மன நிறைவு அளிக்காத நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆயினும் இந்திய கூட்டறவுக்கழகங்களின் பங்கெடுப்பை SKM ஆணையம் பெரிதும் எதிர்பார்க்கிறது. எனவே இரு தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் சிறப்பு செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று டத்தோ அன்புமணி பரிந்துரை செய்துள்ளார்.