கோலாலம்பூர், அக்டோபர் 14-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களின் வாழ்க்கைச் செலவின உயர்வுப் பிரச்னைக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்க்கைச் செலவின உயர்வை கட்டுப்படுத்தும் அதேவேளையில் பொருட்களின் விலை உயர்வை தடுக்க சிறப்பு செயல்திட்டம் ஒன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்று 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலையொட்டி MalaysiaGazette நடத்திய ஆய்வில் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் கருத்தை முன்வைத்துள்ளனர்.
சமையல் எண்ணெய், முட்டை உட்பட பல்வேறு வகையான அத்தியாவசியப்பொருட்களுக்கு அரசாங்கம் வழங்கி வந்த உதவித் தொகை மீட்டுக்கெள்ளப்பட்டுள்ளது. இதுவே வாழ்க்கைச் செலவினங்கள் உயர்வுக்கு முக்கிய காரணமாகும் என்று பலர் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்பில் நிதி அமைச்சரான டத்தோஸ்ரீ அன்வார், 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பிரத்தியேகமாக ஒரு செயல்திட்டத்தை வகுப்பது மூலமே நடப்பு பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.