கோலாலம்பூர், அக்டோபர் 14-
இருதய நோயாளிகளுக்கு தேசிய இருதய சிகிச்சைக்கழகமான IJN, தனது கட்டணத்தை 10 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்த சமர்பித்துள்ள விண்ணப்பம் தொடர்பில் சுகாதார அமைச்சு, முதலில் நிதி அமைச்சுடன் கலந்து ஆலோசிக்கும் என்று அதன் துணை அமைச்சர் லுகானுஸ்மான் அவாங் தெரிவித்துள்ளார்.
IJN- னின் இந்த உத்தேசப்பரிந்துரை குறைந்த வருமானம் பெறுகின்ற சாமானிய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில் அந்த நிபுணத்துவ மருத்துவமனையின் பரிந்துரை முதலில் நிதி அமைச்சுடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்னரே முடிவு செய்யப்படும் என்று லுகானுஸ்மான் அவாங் குறிப்பிட்டார்.
IJN தற்போது நிதி அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால், அந்த அமைச்சுடன் முதலில் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் பண வீக்கமும், மருத்துவமனையை நடத்துவதற்கான செலவினங்களும் உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு இருதய நோயாளிகளுக்கான சிகிச்சை கட்டணத்தை 40 விழுக்காடு வரை உயர்த்தவதற்கு அந்த நிபுணத்துவ மருத்துவமனை உத்தேசித்துள்ளதாக கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி அறிவித்துள்ளது.