போலீசாரால் தேடப்பட்ட வந்த கொள்ளையன் சுட்டுக்கொல்லப்பட்டான்

ஈப்போ , அக்டோபர் 14-

போலீசாரால் மிக தீவிரமாக தேடப்பட்டு வந்த கிள்ளானைச் சேர்ந்த கொள்ளையன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இன்று அதிகாலை 3.10 மணியளவில் தஞ்சங் மாலிம், ஜாலான் ஸ்லிம்- மில் போலீசாருக்கும், கொள்ளையனுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 43 வயதுடைய அந்த கொள்ளையன் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டான்.

உளவுத்துறை வாயிலாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சிலீம் ரீவரை நோக்கி ஜாலான் ஸ்லிம் லாமா – வழியாக சென்று கொண்டிருந்த Nissan Almera ரக கார் ஒன்றை போலீசார் அடையாளம் கண்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.

அந்த Nissan Almera ரக காரை பின் தொடர்ந்த போலீஸ் குழுவினர், அக்காரை நிறுத்தும்படி அதன் ஓட்டுநருக்கு உத்தரவிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் காரில் இருந்தவன், போலீசாரை நோக்கி சுடத்தொடங்கியதாக டத்தோ அசிசி குறிப்பிட்டார்.

போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் பதிலடித் தாக்குதலில் ஈடுபடட் போது போலீசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் அந்த கொள்ளையன் சுட்டு வீழ்த்தப்பட்டான் என்று அவர் விளக்கினார்.

கிள்ளானைச் சேர்ந்த அந்த கொள்ளையன், போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்ததுடன் கடந்த காலங்களில் அவன் மீது 11 குற்றப்பதிவுகள் உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ அசிசி குறிப்பிட்டார்.

நகை விற்பனை மொத்த வியாபாரியிடம் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த கொள்ளையன் மூளையாக இருந்து செயல்பட்டவன் என்பதும் தெரியவந்துள்ளது.

இவன், கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, ஜோகூர், நெகிரி செம்பிலான் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 25 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தக் கொள்ளைக் கும்பலினால் 3 கோடியே 42 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது. இக்கும்பலைச் சேர்ந்த இதர கொள்ளையர்களுக்கு எதிராக போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளதாக டத்தோ அசிசி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS