டுங்குன் ,அக்டோபர் 15-
தாம் செலுத்திய கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து நான்கு பல்கலைக்கழக மாணவர்களை மோதித் தள்ளியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மாது ஒருவர் திரெங்கானு, டுங்குன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
நோரிசான் இஸ்மாயில் என்ற 49 வயதுடைய அந்த மாது மீது மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டுங்குன் வளாகத்திற்கு அருகில் அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மூன்று மாணவர்களுக்கு மரணம் விளைவித்ததாக அந்த மாது குற்றஞ்சாட்டப்ப்டடார்.
மாஜிஸ்திரேட் நூர் அமிரா பாத்திஹா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அந்த மாது அமைதியாக காணப்பட்டார்
25 வயது முகமட் அக்மால், 20 வயது கு அடிப் ஐசாத் கு அஸ்மி மற்றும் 20 வயது கைரி ஜமாலுதீன் ஆகிய மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.