சுங்கை பெட்டானி , அக்டோபர் 15-
கெடா, சுங்கைப்பட்டாணி, ஜாலான் லென்சாங் திமூர்-ரில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் சமையல்காரர் ஒருவர் உயிரிழந்தார். அவர் பயணம் செய்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மண்வாரி இயந்திரத்தின் பின்புறம் மோதியது.
காரின் முன்புறம் முற்றாக நசுங்கிய நிலையில், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 48 வயதுடைய அந்த சமையல்காரர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
காலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காரின் இடிபாடுகளுக்கு மத்தியில் அந்த சமையல்காரரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை போலீசார் நாடியதாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் குறிப்பிட்டார்.