ஷா ஆலம், அக்டோபர் 15-
கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி கிள்ளான்,பந்தர் புக்கிட் டிங்கி 1 , அருகில் ஓர் அடுக்குமாடி வீட்டில் 12 வயது சிறுமி காணாமல் போனதாக கூறப்பட்ட சம்பவத்தில் அந்த சிறுமியை கடத்தியதாக நம்பப்படும் இரண்டு சந்தேகப் பேர்வழிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
அந்த சிறுமி கடத்தல் தொடர்பில் இதுவரையில் 13 க்கும் 23 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி சிலாங்கூரில் ஷா ஆலாம், கிள்ளான் ஆகிய பகுதிகளிலும் / கோலாலம்பூர் வட்டாரத்திலும் / போலீசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ உசேன் உமர் கான் குறிப்பிட்டார்.
சிறுமி கடத்தப்பட்டதற்கான பின்னணி தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. கடத்தப்பட்டதாக கூறப்படும் அந்த சிறுமி அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.