டயாலிசிஸ் நிதி உதவி – பலரின் உயிரை காக்கிறது மித்ரா

மலேசிய மக்கள் வாழ்வாதாரத்தையும், சமூகப் பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்துவதற்கு மடானி அரசாங்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 376 நலத்திட்டங்களை அறிவித்தது. அவற்றுல் பல்வேறு திட்டங்கள் உரிய இலக்கை அடைந்துள்ளன. மேலும் சில திட்டங்கள் அமலில் உள்ளன.

அந்த வகையில் மலேசிய இந்திய சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, அவர்களின் நலனை காப்பற்கும் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் தற்போது ஆக்ககரமான பலாபலனை அளித்து வருகின்றன.

மலேசிய சமுதாயத்தில் ஓர் அங்கமாக விளங்கி வருகின்ற இந்திய சமுதயாத்தைச் சேர்ந்தவர்கள், தேசிய நீரோடையில் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அவர்களுக்கும் சிறப்பு மானியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிதி ஒதுக்கீடுகள் யாவும் இந்திய சமுதாயத்திற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதாவது ஒரு வகையில் பலன் அளித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமற்றுத் திட்டமாக மித்ரா, இந்த 2024 ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த சிறுநீரக நோயளிகளுக்கான டயாலிசியஸ் சிகிச்சைக்குரிய உதவித்தொகை திட்டத்தை அறிவித்தது.

தற்போது மித்ரா சிறப்புப்பணிக்குழுவின் தலைவராக இருக்கும் பி. பிரபாகரன் வெளியிட்ட தகவலின்படி மித்ரா வாயிலாக இவ்வாண்டில் டயாலிசிஸ் சிகிச்சைக்காக 80 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்திய சமுதாயத்தை சேர்ந்த சுமார் 800 நோயாளிகள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இறுதி நிலை சிறுநீரக நோயால் ( ESRD ( பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, குறிப்பாக டயாலிசிஸ் சிகிச்சையைப் பெறுவதற்கு இயலாமை நிலையில் இருக்கும் சிறுநீரக நோயாளிகள், சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட டயாலிசிஸ் மையங்களில் ரத்த சுத்திகரிப்பு செய்து கொள்வதற்கு ஏதுவாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரபாகரன் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு நோயாளிக்கும் சராசரி 10 ஆயிரம் வெள்ளி அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும். தலா 5 ஆயிரம் வெள்ளி வீதம் ஆண்டுக்கு இரண்டு முறை இந்த நிதி உதவி வழங்கப்படும் என்று பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

டயாலிசிஸ் நோயாளி ஒவ்வொருவரும் ஒரு வருடத்திற்கு டயாலிசிஸ் சிகிச்சை, ஊசி ( RM2,800), இரத்த பரிசோதனைகள் (RM600) மற்றும் போக்குவரத்து செலவு (RM1,500) ஆகியவற்றுக்காக கிட்டத்தட்ட RM10,000 வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் மித்ரா மூலமாக டயாலிசியஸ் சிகிச்சைக்கு உதவித் தொகையை பெற்று வருகின்றவர்கள், மடானி அரசாங்கத்தின் இந்த உதவி, தங்களின் சிரமங்களை எவ்வாறு குறைத்து வருகிறது என்பதை அவர்களே நேரடியாக தங்கள் அனுபவத்தை இங்கு பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

ராஜகோபால் கோவிந்தராஜு

ராஜகோபால் கோவிந்தராஜு. வயது 70. சிலாங்கூர், காஜாங், சுங்கை ஜெலுக், தாமான் காஜாங் பாருவைச் சேர்ந்தவர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டார். அவரின் உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், எஞ்சிய காலம் வரையில் கட்டாயம் டயாலிசிஸ் சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும் அறிவுறுத்திவிட்டனர்.

ராஜகோபலுக்கு தலையில் இடிவிழுந்தது போல் ஆகிவிட்டது. பிள்ளைகள் திருமணமாகி அவரவர் குடும்பத்திற்கு சென்று விட்ட நிலையில் ஒரு மகன் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது, இப்படியொரு நிலையா? என்று தன்னைத் தானே நொந்துக்கொண்டார்.

பணி ஓய்வுப்பெற்ற நிலையில் எந்தவொரு சேமிப்பும் இல்லாத நிலையில் போதுமான பணமின்றி தட்டுத்தடுமாறி வந்து, டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் ராஜகோபாலின் பரிதாப நிலையை கண்ட தாதியர் மகேஸ்வரி, அந்த பெரியவருக்கு உதவ வேண்டும் என்பதற்காக இரண்டு மூன்று இடங்களில் உதவிக்கேட்டுப்பார்த்துள்ளார்.

இறுதியில் தமக்கு தெரிந்த ஒரு டயாசிஸ் செண்டர் மூலமாக ராஜகோபாலின் பரிதாபநிலை, இந்தியர்களின் சமூகவியல் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜகோபாலின் குடும்ப பின்னணி ஆராயப்பட்டதில் B 40 குடும்பப் பின்னணியைக்கொண்ட ராஜா கோபாலின் விண்ணப்பம் உடனடியாக அங்கீகரிக்கப்பட்டு, அவர் காஜாங் வட்டாரத்திலேயே ஒரு டயாசியஸ் செண்டரில் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சையை செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மகேஸ்வரி விவரிக்கிறார்.

அந்த டயாலிசிஸ் செண்டரில் ராஜகோபால் வாரத்திற்கு மூன்று முறை என்ற அளவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியிலிருந்து 2024 அக்டோபர் மாதம் வரையில் 12 மாதங்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சையை செய்து கொள்வதற்கு மித்ரா 9,600 வெள்ளியை அங்கீகரித்துள்ளதாக மகேஸ்வரி கூறுகிறார்.

உரிய நேரத்தில், உயரிய நபருக்கு, உரிய செலவினத்தை மித்ரா ஏற்றுக்கொண்டது மூலம் வாரத்திற்கு மூன்று முறை என்ற அளவில் ஒவ்வொரு முறையும் 220 வெள்ளி கட்டணத்தில் டயாலிசிஸ் சிகிச்சையும், தேவையான மருந்துப்பொருட்களையும், ராஜகோபாலினால் இப்போது சிரமமின்றி இப்போது பெற்றுக்கொள்ள முடிகிறது.

மித்ரா உரிய நிதி உதவியை செய்யவில்லை என்றால் மிக ஏழ்மையான குடும்ப பின்னணியைக் கொண்ட ராஜகோபாலின் நிலை என்னவாகியிருக்கும் என்று நினைத்துபாருங்கள் என்கிறார் சமூக தன்னார்வலரான தாதி மகேஸ்வரி.

பெரியவர் ராஜகோபால் மட்டுமல்ல. ஏழ்மை நிலையில் உள்ள எத்தனையோ இந்திய குடும்பங்களைச் சேர்ந்த சிறுநீராக நோயாளிகள், டயாலிசிஸ் சிகிச்சையை செய்து கொள்வதற்கு பெரியளவில் மித்ரா நிதி உதவி வழங்கி வருகிறது என்று மகேஸ்வரி குறிப்பிடுகிறார்.

தங்கராஜன் பெருமாள்

மடானி அரசாங்கத்தின் வழி மித்ரா வழங்கி வரும் இந்த நிதி உதவி போற்றத்தக்கது என்பது மட்டுமல்ல, நிதி நெருக்கடியினால் பெரும் சிரமத்தில் உள்ள தம்மைப் போல எண்ணற்ற டயாலிசியஸ் நோயாளிகள் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு வழிவகுக்கிறது என்கிறார் ஒரு சிறுநீரக நோயாளியான 66 வயது தங்கராஜன் பெருமாள்.

சிலாங்கூர், சிப்பாங், ரூமா மூரா தஞ்சோங்கைச் சேர்ந்த தங்கராஜன், முன்பு சிப்பாங் சுங்கை லீனாவ் தோட்டத்தில் செம்பனைத்தோட்டத் தொழிலாளராக வேலை செய்து ஓய்வுப்பெற்றவர்.

உயர் ரத்த அழுத்ததின் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, கடந்த கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறுகிறார். சிப்பாங், சுங்கை பீலேக்கில் உள்ள டயாலிசிஸ் மையத்தில் ரத்த சுத்திகரிப்பு செய்து கொள்வதற்கு ஒரு மாதத்திற்கு சராசாரி தமக்கு மூவாயிரம் வெள்ளி செலவாகும் என்கிறார் தங்கராஜன்.

முன்பு என் மகள், இந்த மருத்துவச் செலவினத்தை ஈடுகட்டுவதற்கு உதவி வந்தார். அவர் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்றப்பின்னர் மற்றப் பிள்ளைகளின் உதவியுடன் ஒரு மாதத்திற்கு தேவைப்படக்கூடிய இந்த மூவாயிரம் வெள்ளியை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் திரட்டி டயாலிசிஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தி வந்தேன்.

ஒவ்வொரு முறையும் 200 வெள்ளி வீதம் வாரத்திற்கு மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும். இதைத் தவிர தேவையான மருந்துப்பொருட்களையும் வாங்கிக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 4 ஆயிரம் வெள்ளி மாதத்திற்கு தேவைப்பட்டது.

பிள்ளைகள் மற்றும் மனைவியின் ஆதரவு இருந்ததால் இதனை என்னால் ஓரளவு சமாளிக்க முடிந்தது. என்னுடைய துரதிரஷ்டம், இரு கால்களிலும் போதுமான பலம் இல்லாமல் கடந்த ஆண்டு கீழே விழுந்து விட்டேன்.

இடுப்புக்கு கீழே இரண்டு இடுக்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. முதலில் காப்புறுதி மருத்துவக் கார்டு இருந்ததால் சிரம்பான் கொலம்பியா மருத்துவமனையில் 29 ஆயிரம் வெள்ளி செலவில் கடந்த ஆண்டு மே மாதம் ஒரு அறுவை சிகிச்சையை செய்து கொண்டேன். அதன் பின்னர் மற்றொரு அறுவையை சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மருத்துவ சிகிச்சைக்கான காப்புறுதி கார்டு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விட்டதால் மீண்டும் பயன்படுத்த முடியாமல் நெருக்கடி ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் பேரம் பேசி, கட்டண கழிவு அடிப்படையில் 22 ஆயிரம் வெள்ளி அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டேன். பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் அந்த 22 ஆயிரம் வெள்ளியை செலுத்தி இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

அப்படி செய்து கொண்டும் இன்னமும் என்னால் நடக்க முடியவில்லை. சக்கர வண்டியில்தான் அமர்ந்து இருக்கிறேன். பிள்ளைகளின் உதவியுடன்தான் நிற்க முடிகிறது.

ஒரு புறம் டயாலிசிஸ் சிகிச்சை மற்றொரு புறம் நடக்க முடியாத நிலை. இரண்டுக்கும் வைத்தியம் பார்ப்பதற்கும், மருந்துப்பொருட்கள் வாங்குவதற்கும் பெரும் சிரதமத்தை எதிர்நோக்கியிருந்த வேளையில்தான் மடானி அரசாங்கத்தின் மூலம் மித்ரா வாயிலாக டயாலிசிஸ் சிகிச்கைகான உதவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதி கிடைத்தது. 2023 நவம்பர் முதல் தேதியிலிருந்து 2024 அக்டோபர் 30 ஆம் தேதி வரை எனக்கு 9,600 வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியை நான் டயாலிசிஸ் சிகிச்சைப்பெற்று வரும் சுங்கைப் பீலேக் டயாலிசியஸ் செண்டருக்கே மித்ரா அனுப்பிவைத்துள்ளது. இதன் மூலம் டயாலிசிஸ் சிகிச்சைக்கு நான் மாதம் தோறும் செலுத்தி வந்த மூவாயிரம் வெள்ளியில் கிட்டத்தட்ட 800 வெள்ளி முதல் 850 வெள்ளியை மித்ரா ஏற்றுக்கொண்டுள்ளது. நான் சராசரி 2 ஆயிரம் வெள்ளியை மட்டுமே செலுத்தி வருகிறேன்.

அந்த 800 வெள்ளியை மித்ரா ஏற்றுக்கொண்டது மூலம் சிறுநீரக நோயாளிகளுக்கு இயல்பாகவே தேவைப்படக்கூடிய மருத்து மாத்திரைகளை சிரமமின்றி இப்போது என்னால் வாங்கிக்கொள்ள முடிகிறது.

இது பெரிய சுமையை குறைந்து விட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒவ்வொரு முறையும் இதனால் ஏற்படக்கூடிய பெரும் நிதி சுமை சற்று குறைந்து இருப்பதைப்போல உணர முடிகிறது. பிள்ளைகளின் ஆதரவும், மித்ராவின் உதவியும் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

நம்மைப் போலவே நிறைய சிறுநீராக நோயாளிகள் மித்ராவின் மூலம் பலன் பெற வேண்டும் என்பதால் அவர்கள் பங்கீட்டு நமக்கு அளித்துள்ள 2024 ஆம் ஆண்டிற்கான 9,600 வெள்ளி உதவித்தொகை, என்னை உயிர் காத்து வருகிறது. அதற்காகவே மித்ராவிற்கும், தற்போதைய மடானி அரசாங்கத்திற்கும் நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளேன் என்று சக்கர வண்டியில் அமர்ந்தவாறு மித்ரா செய்த உதவிகளை பகிர்ந்து கொண்டார் தங்கராஜன் பெருமாள்.

கார்த்திகேசு கண்ணு

ஒரு சிறுநீரக நோயாளியான கோலாலம்பூர், ஜாலான் பெரிசாவைச் சேர்ந்த 54 வயது கார்த்திகேசு கண்ணு கூறுகையில், டயாலியஸ் சிகிச்சைக்கு மித்ரா தமக்கு வழங்கக்கூடிய உதவியினால் அந்தப் பணத்தில் பிற மருத்துப்பொருட்களை வாங்க முடிகிறது என்கிறார்.

ஒரு கணக்காய்வுத்துறை முன்னாள் பணியாளரான கார்த்திகேசு, டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் மருத்துப்பொருட்களை வாங்குவற்கு தமக்கு சராசரி 4 ஆ யிரம் வெள்ளி தேவைப்பட்டது என்கிறார்.

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் சந்தாதாரர் என்பதால் டயாலிசிஸ் சிகிச்சைக்கு தமக்கு ஒவ்வொரு முறையும் தேவைப்படக்கூடிய 200 வெள்ளியில், 150 வெள்ளியை சொக்சோ ஏற்றுக்கொண்டுள்ளது. தாம் கூடுதலாக 50 வெள்ளி மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது.

ஆனால், மித்ரா தமக்கு கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதியிலிருந்து 2024 ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை 9,600 வெள்ளி டயாலிசிஸ் சிகிச்சைக்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சராசரி 800 வெள்ளியை மருத்துப்பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடிகிறது என்கிறார் கார்த்திகேசு.

வேலையின்றி இருக்கும் தாம், மித்ராவின் உதவி கிடைக்கவில்லை என்றால் அந்த 800 வெள்ளியை எப்படியாவது தேடியாக வேண்டும். காரணம், சிறுநீராக நோயாளி என்பவர்கள் வெறும் டயாலிசிஸ் சிகிச்சையை மட்டும் செய்து கொண்டால் போதுமானது அல்ல. உடலுக்கு தேவைப்படக்கூடிய தடுப்பூசி, மருந்துப்பொருட்கள் போன்றவற்றை வாங்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் மித்ரா வழங்கக்கூடிய இந்த உதவித் தொகை டயாலிசிஸ் நோயாளிகளுக்கு ஒரு புனர்வாழ்வு கிடைத்தது போல் உள்ளது. அதற்காக மித்ராவிற்கும் இந்த மாடானி அரசாங்கத்திற்கும் சிரம் தாழ்த்தி எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்கிறார் கடந்த எட்டு வருடங்களாக டயலிசியஸ் சிகிச்சையை மேற்கொண்டு வரும் கார்த்திகேசு.

படவிளக்கம்

தங்கராஜன் பெருமாள்

WATCH OUR LATEST NEWS