அக்டோபர் 16-
மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் முயசியாக மடானி அரசாங்கம், பலதரப்பட்ட உதவித் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதிகமான பிள்ளைகளை கொண்டவர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த உதவிகள் யாவும், அவர்களின் நிதி வளத்திற்கு ஆதரவாக உள்ளது மட்டுமின்றி அதிகரித்து வரும் குடும்ப நிதிச்சுமையையும் குறைத்து வருகிறது.
குறிப்பாக, அரசாங்கம் அமல்படுத்தி வரும் எஸ்.டி.ஆர். எனப்படும் ரஹ்மா உதவித் உதவித் திட்டத்தின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான மக்கள் நன்மை அடைந்து வருகின்றனர்.
இந்த வருடம் ரஹ்மா ரொக்க நிதி உதவி 3,700 ரிங்கிட் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, பி 40 குடும்பங்களுக்கு பெரியளவில் உதவியிருப்பதுடன், அவர்களின் தனிப்பட்ட நிலையிலும் பெரியளவில் நிதிச் சுமையை குறைத்து இருப்பதாக 2024 ஆம் ஆண்டிற்கான அந்த நிதி உதவியைப் பெற்றவர்கள் விவரித்துள்ளனர்.
இராஜேஸ்வரி தங்கவேலு

கெடா, கூலிம் வட்டாரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இராஜேஸ்வரி த/பெ தங்கவேலு, உடல் நல குறைவினால் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளார். இவ்வாண்டில் முற்பகுதியில் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு சிரமங்களையும், நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வந்த தமக்கு, இவ்வாண்டில் மடானி அரசாங்கம் வழங்கிய ரஹ்மா நிதி உதவித் தொகையினால் தமது சுமையில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்.
“இதுவரையில் எனக்கு மூன்று முறை ரஹ்மா நிதி உதவி கிடைத்து இருக்கிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை.எனவே ரஹ்மா நிதி உதவியில், 350 ரிங்கிட் பெற்று வருகிறேன். இத்தொகைக் குறைவாக இருந்தாலும் எனக்கு தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு பெரும் துணையாக இருக்கிறது.
இந்த உதவித் தொகையை கொண்டு உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ள முடிகிறது. மடானி அரசாங்கம் இந்த ரஹ்மா உதவித் தொகையை வழங்குவதில் மகிழ்ச்சி என்றாலும் இந்த 350 வெள்ளி போதுமானதாக இல்லை. மக்களின் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து விட்டது. இந்த தொகையை மடானி அரசாங்கம் சற்று உயர்த்தினால் பெரும் உதவியாக இருக்கும் என்று இராஜேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.
முகமது அலி இப்ராஹிம் ராவுத்தர்

மடானி அரசாங்கம் வழங்கி வரும் ரஹ்மா உதவித்திட்டம், தம்முடைய நிதிச்சுமையை குறைப்பதில் பெரிதும் உதவி வருகிறது என்று சிலாங்கூர்,பெட்டாலிங் உத்தாமாவைச் சேர்ந்த பகுதி நேர பத்திரிகையாளர் 60 வயது முகமது அலி இப்ராஹிம் ராவுத்தர் கூறுகிறார்.
தமக்கு கிடைக்கக்கூடிய வருமானம், ஓரளவு குடும்பச்சுமையை குறைக்கிறது என்றாலும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற உபாதைகளினால் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்ய முடியாத நிலையில் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக முகமது அலி கூறுகிறார்.
இந்நிலையில் மடானி அரசாங்கம் வழங்கக்கூடிய ரஹ்மா ரொக்க உதவி, மருத்துவமனைக்கு அப்பாற்பட்ட நிலையில் மருந்தகங்களில் விற்கக் கூடிய ஊட்டச்சத்து மருந்துப்பொருட்களை வாங்குவதற்கு தமக்கு உதவியாக இருப்பதாக கூறுகிறார்.
“இந்த 2024 ஆம் ஆண்டில் இதுவரை மூன்று முறை ரஹ்மா உதவித் தொகையைப் பெற்று விட்டேன். கடந்த பிப்ரவரி மாதம் 150 வெள்ளி கிடைத்தது. கடந்த மே மாதம் 300 வெள்ளி கிடைத்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 300 வெள்ளி கிடைத்துள்ளது. மருந்துப்பொருட்களை வாங்குவற்கு சரியாக இருக்கிறது. இந்த கூடுதல் உதவித்தொகையின் அளவை உயர்த்தினால் இன்னும் சில கூடுதல் மருந்துப்பொருட்களை தம்மால் வாங்க முடியும் என்று முகமது அலி தெரிவித்துள்ளார்.
இராசம்மா தண்ணீர்மலை

500 ரிங்கிட் வரை ரஹ்மா உதவித் தொகையைப் பெற்று வருவத்தாக கூலிம் வட்டாரத்தைச் சேர்ந்த 70 வயது இராசமா த/பெ தண்ணீர்மலை கூறுகிறார்.
*இந்த மடானி அரசாங்கம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளுமின்றி பல விதமான உதவிகளை வழங்கி வருவதற்கு எங்களின் பாராட்டுகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த ரஹ்மா உதவித் தொகையைக் கொண்டு எனக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொள்கிறேன். மூன்று மாததத்திற்கு ஒரு முறை வழங்கினாலும் அந்த மாதத்தில் எனக்கு எது தேவையோ, அதனை அப்பணத்தைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது..
அதுமட்டுமின்றி , ரஹ்மா உதவித் தொகையில் வீட்டின் மின்சாரம், தண்ணீர் கட்டணம் கட்டுவத்தற்கும் உதவியாக உள்ளது . மாதந்தோறும் உடல் சுகாதார பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்லும் சமயத்தில் ரஹ்மா உதவித் தொகையைப் பயன்படுத்தி கிரேப் வாகனங்களுக்கு போக்குவரத்து வாடகைப் பணத்தை செலுத்துகிறேன்.
ஒவ்வொரு முறையும் ரஹ்மா உதவித் தொகை பணம் கிடைக்கும் போது ஏதாவது ஒரு தேவையை இந்த வயதில் என்னால் பூர்த்தி செய்துக்கொள்ள முடிகிறது. எங்களைப் போல வயதானவர்களுக்கு அந்தப் பணம் கிடைப்பது வரவேற்கக்கூடியது.
ஒரே நேரத்தில் பெரியத் தொகையாகவும், சிறியத் தொகையாகவும் இல்லாமல், அந்த தொகையை 12 மாதங்களுக்கு பிரித்து ஒரே சீராக கொடுத்தால் இந்த தேதியில் இந்தப் பணம் வந்து விடும் என்ற நம்பிக்கையில் ஏதாவது ஒன்றை வாங்குவதற்கு எங்களால் திட்டமிட முடியும். இதனை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று மூதாட்டி இராசம்மா தண்ணீர்மலை கேட்டுக்கொண்டுள்ளார்.
அமுதா முனியாண்டி

இல்லத்தரசி என்பதால் குடும்பத்தில் பல செலவுகள் இருந்துக் கொண்டே இருக்கும் . மாதம்தோறும் கிடைக்கப்பெறும் சம்பளம் பற்றாக் குறையினால் சில தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் மடானி அரசாங்கம் வழங்கும் ரஹ்மா உதவித்தொகை உண்மையிலேயே பெரிய உதவியாக இருக்கிறது என்கிறார் 59 வயது குடும்பமாது அமுதா த/பெ முனியான்டி.
*ரஹ்மா உதவித் தொகை எனக்கு மட்டுமின்றி பள்ளி செல்லும் பிள்ளைகளின் கல்விக்குத் தேவையான சிலவற்றையும் பூர்த்திச் செய்ய இயல்கிறது. வீட்டு வருமானம் குடும்ப செலவுக்கு சரியாக இருக்கிறது. பிள்ளைகள் தங்கள் புறப்பாட நடவடிக்கைக்கு தேவைப்படக்கூடிய விளையாட்டு சீருடைப் போன்ற பொருட்களை வாங்குவதற்கும் பேருதவியாக இருக்கிறது. மடானி அரசாங்கம் வழங்கக்கூடிய இந்த உதவித்தொகை ஒரு போதும் நிறுத்தப்பட்டு வருகிறது. என்னைப் போன்ற இல்லத்தரசிகளுக்கு இந்த ரஹ்மா உதவித் தொகை பெரும் துணையாக இருக்கிறது என்று அமுதா முனியாண்டி கூறுகிறார்.
கோலாலம்பூரைச் சேர்ந்த 32 வயது மனோன்மணி ராஜலிங்கம் கூறுகையில் தற்போது வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக இருப்பதால், கிடைக்கும் சம்பளம் அன்றாட செலவுகளுக்கு போதுமானதாக இல்லை.
பெறப்பட்ட ரஹ்மா உதவிப் பணம் போக்குவரத்து செலவுகள், உணவு, கட்டணம் செலுத்துதல், தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) கடன்கள் மற்றும் பலவற்றிற்கு பயன்படுத்தப்பட்டது.
“நான் பெறும் உதவியை கவனமாகப் பயன்படுத்துகிறேன். வேறுவிதமாகக் கூறினால், அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள ஒன்றைப் பெறுவதற்கு மட்டுமே நான் இந்த உதவியைப் பயன்படுத்துகிறேன்” என்று மனோன்மணி ராஜலிங்கம் கூறினார்.
ரஹ்மா ராஹ்மா உதவித் திட்டம், பல்வேறு வாழ்க்கைப் பின்னணியில் உள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் நிலையில் மடானி அரசாங்கம், இந்த உதவித்திட்டத்தின் தொகையை சற்று உயர்த்துவது குறித்து சற்று பரிசீலிக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதர உதவித் திட்டங்கள்
எனினும் ரஹ்மா உதவித் திட்டத்தின் மூலம் நிதி உதவிப்பெற்று வருகின்றவர்கள், அந்த தொகைப் போதவில்லை, குடும்ப நிதி சுமையை குறைப்பதற்கு இன்னும் உதவித் தேவைப்படுகிறது என்று எதிர்பார்க்கக்கூடியவர்கள், இதர உதவித் திட்டங்களுக்கும் விண்ணப்பிப்பிப்பதற்கான வாப்பையும் மடானி அரசாங்கம் திறந்துள்ளது.
குறிப்பாக 60 வயதை எட்டியவர்கள், பந்துவான் வர்கா எமாஸ் எனப்படும் மூத்தக்குடிமக்களுக்கான நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மூத்த குடிமக்களுக்கு இவ்வாண்டு ஜனவரியிலிருந்து 60 கோடியே 10 லட்சம் வெள்ளியை மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சு மூலமாக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
தகுதி பெற்ற மூத்த குடிமக்கள் இதன் வாயிலாக மாதம் தோறும் தலா 500 வெள்ளி உதவித் தொகையை பெற முடியும்.
தவிர அதிகரித்து வரும் வாழ்க்சைச் செலவு உயர்வினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இ- காசே திட்டத்தின் வாயிலாக இலக்கு மானியமாக சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா திட்டத்தையும் அரசாங்கம் மேம்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பது மூலம் தகுதி வாய்ந்தவர்களுக்கு தலா 300 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
போதுமான நிதி உதவி கிடைக்கவில்லை என்பவர்கள் இத்திட்டத்திற்கும் விண்ணப்பம் செய்யலாம், பலன் பெறலாம், அதற்கான வாய்ப்பையும், கட்டமைப்பையும் மடானி அரசாங்கம் திறந்துள்ளது.