கோலாலம்பூர், அக்டோபர் 16-
வருகின்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள B40 இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்காக மடானி அரசாங்கத்தின் மற்றொரு சிறப்பு அனுகூலமாக Vanakam Madani திட்டத்தின் கீழ் 10 ஆயிரத்து 300 தீபாவளி அன்பளிப்பு உணவுக்கூடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ R. ரமணன் அறிவித்துள்ளார்.

இம்மாதம் இறுதியில் கொண்டாடப்படும் தீபாவளி திருநாளையொட்டி, வணக்கம் மடானி திட்டத்தின் கீழ் தீபாவளி அன்பளிப்பு உணவுக்கூடைகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு டத்தோஸ்ரீ ரமணனை நாடாளுமன்ற உறுப்பினராக கொண்ட சுங்கைப்பூலோ நாடாளுமன்றத்தொகுதியில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது.
பேங்க் ராக்யாட் அறவாரியத்துடன் இணைந்து, சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையத்தின் ஒத்துழைப்புடன் அத்தொகுதியில் B40 குடும்பங்களைச் சேர்ந்த இந்தியர்களுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட தீபாவளி அன்பளிப்பு உணவுக்கூடைகளை விநியோகிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இதனை துணை அமைச்சரும், சுங்கை பூலோ எம்.பி.யுமான டத்தோஸ்ரீ ரமணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த தீபாவளி உணவுக்கூடைகள், உதவித் தேவைப்படக்கூடிய இலக்குக்கு உரிய மக்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள சமூகத் தலைவர்கள் மற்றும் அரசாங்க ஏஜென்சிகள் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, வணக்கம் மடானியின் இந்த அன்பளிப்பை பெறுவர் என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
இதேபோன்று இந்த 10,300 உணவுக்கூடைகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டப் பின்னர், இந்த உணவுக்கூடைகள் அனைத்தும் உதவித் தேவைபடக்கூடிய மக்களை சென்றடைந்துள்ளது என்பதை வெளிப்படையாக தெரிந்து கொள்ளும் பொருட்டு அவர்களின் பெயர் பட்டியல் பேங்க் ராக்யாட் அறவாரியத்தின் அகப்பக்கத்தில் இடம் பெறச் செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்தார்.
