குவாந்தன்,அக்டோபர் 16-
நேற்று குவாலா லிபிஸ், ஜாலான் லிபிஸ்-பென்டா, , கிலோமீட்டர் 23-ல் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது செம்பனை மரம் விழுந்ததில் தாயும் அவரது மகனும் பலத்த காயமடைந்தனர்.
நேற்று மதியம் 1 மணியளவில் நடந்த இவ்விபத்தில், தாமன் தேரதையைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் எஸ் தனலெட்சுமி, 37 என்பவரின் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டன என கோலா லிபிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் இஸ்மாயில் நாயகன் கூறினார்.
அம்மாது பள்ளியிலிருந்து தனது 7 வயது மகன் கே தனுஷ்ரூ யை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தின் விளைவாக, தலை மற்றும் மார்பில் பலத்த காயம் அடைந்ததாக அவர் மேலும் கூறினார்.
பலத்த காற்றுடன் வானிலை மோசமாக இருந்ததன் காரணமாக திடீரென்று மலையடிவாரத்தில் ஒரு செம்பனை மரம் விழுந்து பாதிக்கப்பட்ட இருவரையும் காயத்திற்குள்ளாக்கியது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது கோலா லிபிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் லிபிஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை (IPD) 09-3121999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். .