புக்கிட் பிளாண்டோக் பகுதியில் வீசப்பட்ட ரசாயன கழிவுகள்

போர்ட் டிக்சன் , அக்டோபர் 17-

போர்ட்டிக்சன், புக்கிட் பிளாண்டோக் பகுதியில், பொறுப்பற்ற நபர்களால் கொட்டப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் சாயம், எண்ணெய்க் கழிவுகளை உள்ளடக்கியதாக சந்தேகிக்கப்படும் ரசாயனக் கழிவுகள் கடந்த திங்கட்கிழமை கண்டு பிடிக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில மனித வளம், பருவநிலைமாற்றம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.வீரப்பன் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து மாலை 4.30 மணியளவில் நெகிரி செம்பிலான் சுற்றுச்சூழல் இலாகா புகார் பிரிவு, WhatsApp மூலம் பொது மக்களிடமிருந்து புகார் பெற்றதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

சம்பவம் நிகழ்ந்த பகுதியில் சோதனை மேற்கொண்டதில் 210 லிட்டர் கொள்ளளவைக் கொண்ட 70 முதல் 100 பீப்பாய்களும், ஆயிரம் லிட்டர் கொள்ளளவைக்கொண்ட கிட்டத்தட்ட 50 கொள்கலன்களும் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதிகாரிகளால் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு கொள்கலன்களின் லேபிள்கள் எதுவும் இல்லை. வேண்மென்றே அவை அகற்றப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் காணப்பட்ட எண்ணெய் மாதிரிகள், விரிவான சோதனைக்காக தற்போது மலேசிய ரயாயன இலாகாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உரிய நடவடிக்கைக்காக இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சம்பந்தப்பட்ட பகுதி, அமலாக்கத் தரப்பினரால் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அப்பகுதியில் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டப் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் வீரப்பன் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS