மித்ரா எங்களின் நம்பிக்கை ஒளியாகும்

தங்களின் வாழ்வாதார உயர்விற்கு மடானி அரசாங்கம் ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, இந்திய சமூகத்தில் குறிப்பாக B40 பிரிவைச் சேர்ந்தவர்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது.

2024 பட்ஜெட்டின் கீழ் இந்திய சமூகத்திற்காக அரசாங்கம் அறிவித்த நிதி ஒதுக்கீடானது, தங்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்த சாமானிய மக்கள், பல்வேறு திட்ட உதவிகளால் உந்தப்பட்டு, தங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்ள அந்த திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

சமூக உருமாற்றுப்பிரிவு மித்ரா

அந்த வகையில் மடானி அரசாங்கத்தின் கீழ் பிரதமர் துறையின் நேரடிப்பார்வையில் இருந்து வரும் இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ராவிற்கு 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 10 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அது முழுக்க, முழுக்க இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்களுக்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மித்ரா சிறப்பு பணிக்குழுவின் தலைவர் பி.பிரபாகரன் கூறுகிறார்.

வறிய மக்களுக்கு உதவுவதல், அவர்கள் சுயகாலில் நிற்பதற்கு ஏதுவாக சிறு வணிக வாய்ப்பை ஏற்படுத்துதல், அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவுவது. சிறுநீரக நோயாளிகளுக்கு டியாலிசிஸ் சிகிச்சைக்கான நிதி உதவி, தனியார் மழலையர் பாலர் மாணவர்களுக்கு நிதி உதவி உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மித்ரா இன்று உதவிக்கரம் நீட்டி வருகிறது.

கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி மித்ரா சிறப்புப்பணிக்குழுத் தலைவர் பி. பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையின்படி 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மித்ராவிற்கு அரசாங்கம் அறிவித்த 10 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் 9 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 075 பயன்படுத்தப்பட்டு விட்டதாக பிரபாகரன் அறிவித்துள்ளார்.

இதில் இந்திய சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, அவர்களின் ஏழ்மை நிலையைப் போக்குவதற்காக அதீத முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செலவிடப்பட்ட மொத்த ஒதுக்கீட்டில் 6 கோடி ரிங்கிட்டானது, இலக்குக்குரிய மக்களின் வாழ்வியல் தரத்தை உயர்த்துவதாகும்.

இதில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தங்கள் வறிய நிலையிலிருந்து விடுபடுவதற்கு ரொக்க உதவித் தொகையும் மித்ரா வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரையில் 1,845 பேர் இந்த ஏழ்மை நிலை உதவியை பெற்றுள்ளனர் என்று மித்ரா தரவுகள் கூறுகின்றன.

அதேவேளையில் குடும்பத்திற்காக வருாமனம் ஈட்டி வருகின்ற குடும்பத் தலைவர் அல்லது தலைவி திடீரென்று நோய்ப்பாட்டால் அல்லது பொருளாதார தாக்கத்தினால் பாதிக்கப்பட்டால் அவர்களின் குடும்பம் முடக்கிவிடாமல், சிறிய மூலத்தனத்தை கொண்டு ஏதாவது ஒரு கைத்தொழிலை செய்து, குடும்பத்தை முன்னேற்றுவதற்கும் இந்த உதவித்திட்டம் வகை செய்து வருகிறது.

ஒரு உதவித் தொகையைகொடுத்து, அவர்களின் அன்றைய சிரமத்தை மட்டும் களைய செய்து விடாமல், ஒரு நீடித்த காலத்திற்கு குடும்பத்தை சுயகாலில் நின்று சமாளிப்பதற்கும், தங்களின் ஏழ்மை நிலையைப் போக்கிக்கொள்தற்கும் மித்ராவின் திட்டங்கள் இந்திய சமுதாயத்திற்கு பெரிதும் உதவி வருகின்றன.

மகேஸ்வரியின் இன்றைய நிலை

இந்திய சமுதாயத்தில் இலக்குக்கு உரிய மக்களை உயர்த்திவிடும் மித்ராவின் இத்திட்டம் வாயிலாக தாங்கள் எதிர்நோக்கிய பல்வேறு சோதனைகளை சாதனைகளாக மாற்றிக்கொண்டு வருகின்றவர்களில் 43 வயது மகேஸ்வரி முதுசுதனும் ஒருவர் ஆவார்.

சிலாங்கூர், ஜாலான் பூச்சோங், கம்போங் முஹிபா பி.பி.ஆர். பொது அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவரான மகேஸ்வரிக்கு 7 பிள்ளைகள் உள்ளனர். கணவர் லெட்சுமணன், ஒரு இருதய நோயாளி ஆவார். மின்சார ஒயரிங் செய்யும் அற்றைக்கூலி தொழிலாளரான 48 வயது லெட்சுமணன், இருதய நோயால் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்து கொண்டப்பின்னர் வீட்டில்தான் இருக்கிறார்.

ஒரு துப்புரவு பணியாளராக வேலை செய்து வரும் மகேஸ்வரிக்கு கிடைக்கக்கூடிய மாதாந்திர வருமானம் 1,500 வெள்ளியாகும். இந்த சொற்ப வருமானத்தில்தான் குடும்ப செலவு, வீட்டு வாடகை, மின்சாரக்கட்டணம் மற்றும் 7 பிள்ளைகளின் படிப்பு என்று கவனித்துக்கொண்டு மிகுந்த சிரமத்தில் வாழ்க்கையை நடத்தி வந்த மகேஸ்வரி, சில ஆண்டுகளுக்கு முன் உதவிக்கேட்டு மித்ராவிற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

எந்தவொரு பதிலும் வராத நிலையில், மடானி அரசாங்கம் கடந்த ஆண்டு முற்பகுதியில் பெட்டாலிங் ஜெயா, சிவிக் செண்டரில் நடத்திய மடானி திட்டங்கள் கண்காட்சி நிகழ்வில் அந்த உதவித் திட்டங்களை கேட்டறிய மகேஸ்வரி சென்றுள்ளார்.

அந்த நிகழ்வில் அமைக்கப்பட்டு இருந்த மித்ரா முகப்பிடத்தில் தனது குடும்ப நிலையை விளக்கியதுடன் படித்துக்கொண்டு இருக்கும் 24 க்கும் 10 க்கும் இடைப்பட்ட வயதுடைய தனது ஐந்து பெண் பிள்ளைகள் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளின் நிலவரத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

மூன்றே மாதத்தில் நல்ல பதில்

இதில் விபத்துக்குள்ளான 24 வயது மூத்த மகன், கடின வேலை செய்ய முடியாத நிலையையும் மகேஸ்வரி விளக்கியிருக்கிறார். தனது விண்ணப்பத்தை மிக கவனமாக பெற்றுக்கொண்ட மித்ரா அதிகாரிகள், மூன்றே மாதத்தில் மகேஸ்வரிக்கு ஒரு நல்ல பதிலை வழங்கியுள்ளனர்.

தன்னுடைய 1,500 வெள்ளி வருமானம் குடும்ப செலவினத்தை சமாளிக்க முடியாத நிலையில் ஒவ்வொரு வாரத்திலும் ஓரிரு முறை வீட்டிலேயே உணவு கேட்டரிங் தயாரித்து, பிறந்த நாள் போன்ற விஷேச நிகழ்ச்சிகளை நடத்தும் தனது அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் உள்ளம் மக்களுக்கு மகேஸ்வரி விநியோகம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் மித்ராவிடமிருந்து தமக்கு ஏழ்மை நிலையை போக்கும் உதவித் தொகையாக 3,500 வெள்ளி வழங்கப்பட்டதாக மகேஸ்வரி கூறுகிறார். இந்த தொகை குறித்து தொடக்கத்தில் தம்மால் நம்ப முடியவில்லை என்றாலும் தனது குடும்ப சூழலை சீர்த்தூக்கிப்பார்த்து கொடுக்கப்பட்ட இந்த உதவித் தொகையை கருணைத் தொகையாக கருதாமல் இதனை தனது வியாபார முதலீடாக மகேஸ்வரி பயன்படுத்தியுள்ளார்.

அடிப்படைப்பொருட்களை வாங்கினார்

கேட்டரிங் சேவையை சற்று விரிவுப்படுத்திக்கொள்வதற்கு அடிப்படையாக தேவைப்படும் சற்று பெரியளவிலான அடுப்பு, பானைகள், ரைஸ் குக்கர், பிளேண்டர், கரண்டி, பாத்திரங்கள் போன்ற தட்டுமுட்டுச்சாமான்களை வாங்குவதற்கு மித்ராவின் அந்த 3,500 வெள்ளியை ஒரு காசுகூட வீண்விரயம் செய்யாமல் தேவையான பொருட்களை மட்டுமே வாங்கியதாக மகேஸ்வரி கூறுகிறார்.

இதன் மூலம் கேட்டரிங் வர்த்தகம் சற்று விரிவாக்கம் செய்து, என்னுடைய அடுக்குமாடி வீடமைப்புப்பகுதி மட்டுமின்றி அருகில் உள்ள குடியிருப்புப்பகுதிகளிலும் உணவு சேவையை வழங்கினேன். 100 முதல் 300 பேர் கலந்து கொள்ளக்கூடிய விருந்து உபசரிப்புகளுக்கு கேட்டரிங் சேவையை வழங்கும் அளவிற்கு தற்போது என் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டு வருகிறேன்.

மித்ராவிடமிருந்த கடந்த ஆகஸ்ட் மாதம் கிடைத்த 2,733 வெள்ளியைக்கூட சட்டத்துறைக்கு படித்து வரும் 20 வயதுடைய எனது இரண்டாவது பிள்ளைக்கு பயன்படுத்தினேன்.

கேட்டரிங் வியாபாரம் பெரிய அளவில் இல்லை என்றாலும் வீட்டு செலவினத்தையும் பிள்ளைகளின் படிப்பிற்கு தேவைப்படக்கூடிய கல்விக்கட்டணங்களையும் சமாளிக்கக்கூடிய அளவிற்கு இப்போதுதான் மெல்ல தலைத்தூக்கத் தொடங்கியிருக்கிறது.

மித்ராவின் இந்த நிதி உதவி கிடைத்து கேட்டரிங் சேவைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு முன்பு, பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாதம் தோறும் நாங்கள் செலுத்த வேண்டிய 124 வெள்ளிக்கூட மூன்று ஆண்டுகளாக செலுத்த முடியாத அளவிற்கு நிலுவையில் இருந்து வந்தது. தண்ணீர், மின்சாரக்கட்டணம்கூட அப்படிதான்.

நம்பிக்கை பிறந்துள்ளது

இப்போது வீட்டு வாடகைக்கட்டணம் எதுவும் நிலுவையில் இல்லை. தற்போது நாங்கள் குடியிருந்து வரும் அடுக்குமாடி வீட்டை, இன்னும் சில ஆண்டுகளில் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது. என் பிள்ளைகளில் ஒருவர் சட்டம் பயிலும் அளவிற்கு கல்வியில் உயர்ந்து வருகிறார். இந்த தீபாவளி பண்டிக்கைக்காக அச்சுமுறுக்கு,சுற்றுமுறுக்கு, அதிரசம், நமது பாரம்பரிய பலகார வகைகள் ஆகியவற்றை செய்து தருவதற்கு நிறைய ஆர்டர்கள் கிடைத்துள்ளன. கூடவே கேக் செய்யும் ஆர்டர்களும் கிடைத்து வருகின்றன.

எனக்கு உதவியாக பிள்ளைகளும் துணை நிற்கின்றன. கையைக் கடிக்காமல் வியாபரத்தை விரிவுப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கையும் இப்போது பிறந்துள்ளது. சிரமத்தில் இருந்து வந்த எனக்கு மடானி அரசாங்கத்தின் வாயிலாக மித்ரா உதவிக்கரம் நீட்டியது மூலம் குடும்பத்தில் ஏழ்மை நிலை, சூரியனைக் கண்ட பனிப்போல் விலகி வருகிறது.

இந்த நேரத்தில் மித்ரா நிர்வாகத்திற்கும், மடானி அரசாங்கத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்கிறார் மகேஸ்வரி.

மகேஸ்வரி மட்டுமல்ல, அவரைப் போல மேலும் பலர், மித்ராவிடமிருந்து பெற்ற ரொக்க உதவித் தொகையினால் அவர்களின் தலையெழுத்து மாறியுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் குடும்பமாது மகேஸ்வரி ஆகும்.

நெகிரிசெம்பிலான், மெராந்தியில் பிறந்து வளர்ந்தவரான மகேஸ்வரி, கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணம் ஆகி, பூச்சோங்கில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்தப் பின்னர் தற்போது 7 பிள்ளைகள் ஆன நிலையில் மித்ரா வழங்கிய கணிசமான நிதி உதவியை நல்ல முறையில் பயன்படுத்தக்கொண்டதன் மூலம் வறுமை நிலையிலிருந்து மீண்டு வருகிறார். மக்களின் ஏழ்மை நிலையை போக்குவதில் அவர்களுக்கு உதவுவதில் மடானி அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாடே இதற்கு சான்றாகும்.

படவிளக்கம்

எம். மகேஸ்வரி

WATCH OUR LATEST NEWS