தமிழ்ப்பள்ளிகளின் கட்டட வசதிகளை மேம்படுத்துவதில் மடானி அரசாங்கம்

நாட்டில் உள்ள தாய்மொழிப்பள்ளிகளான தமிழ், சீனப்பள்ளிகளின் கட்டட வசதிகளை மேம்படுத்துவதிலும், அவற்றின் அடிப்படை கட்டமைப்புகளை பராமரிப்பதிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் உரிய முக்கியத்துவத்தை, முன்னுரிமையையும் வழங்கிவருகிறது.

மடானி அரசாங்கத்தின் 2024 பட்ஜெட்டில் கல்விக்கு அதிமுக்கியத்துவத்தை அளித்துள்ளது. கல்வி அமைச்சுக்கு 58.7 பில்லியன் வெள்ளி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கையின் வாயிலாக மாணவர்களும் சமூகமும் நன்மை அடைவதற்கு இது வழி வகுத்தது.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்காக 1.9 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டிருந்தது. சரவாவில் 185 திட்டங்கள், சபாவில் 155 திட்டங்கள் இதில் உட்படும். மேலும் 26 புதிய பள்ளிக்கூடங்களை நிர்மாணிப்பதற்காக 2.5 பில்லியன் வெள்ளி ஒதுக்கீடும் செய்யப்பட்டு இருந்தது.

2024 பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மொத்தம் 5 கோடி வெள்ளியை நிதி ஒதுக்கீடு செய்தார். இதில் பள்ளிகளின் பாராமரிப்புப் பணிகளுக்கு 2 கோடி வெள்ளியை ஒதுக்கினர் நாடு முழுவதும் 152 தமிழ்ப்பள்ளிகள் முறையான கழிப்பறை வசதிகளை கொண்டு இருப்பதற்கு அவற்றை சீர்ப்படுத்துவதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 70 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தார்.

இந்த அக்டோபர் மாதம் முற்பகுதியில் புத்ராஜெயாவில் இந்தியத் தலைவர்களை சந்தித்த போது தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கு தாம் ஒதுக்கிய அந்த 2 கோடி வெள்ளியை 3 கோடி வெள்ளியாக அதிகரிப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2024 அக்டேபார் 6 ஆம் தேதி பேரா மாநிலத்தின் அரச நகரான கோலகங்சார் மாவட்டத்தையும், உலு பேரா மாவட்டத்தையும் உள்ளடக்கிய சுங்கை சிப்புட், ஈவுட் தமிழ்ப்பள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்துள்ளார்.

ஈவுட் தமிழ்ப்பள்ளி திறப்பு விழா கண்டது மூலம் நாட்டில் 530 ஆவது தமிழ்ப்பள்ளியாக அது விளங்குகிறது. சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு கோடியே 39 லட்சம் வெள்ளி செலவில் இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது.

தமது தலைமையிலான மடானி அரசாங்கம் தேசிய மொழிப்பள்ளிகளுடன் தமிழ், சீனப்பள்ளிகளுக்கும் உரிய முக்கியத்துவத்தையும், முன்னுரிமையையும் வழங்கும் என்று ஈவுட் தமிழ்ப்பள்ளி திறப்பு விழாவில் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்ப்பள்ளியும், தமிழ்க்கல்வியும் நாட்டு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தேவையான மாந்தர் மூலதனத்தை உருவாக்கும் நிலையங்களாக தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வதற்கு அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்பது ஈவுட் தமிழ்ப்பள்ளி ஒரு சான்றாகும்.

தமிழ்ப்பள்ளிகளின் கற்றல் , கற்பித்தல் வசதியை மேற்படுத்துவற்கு நாட்டில் உள்ள இதர தமிழ்ப்பள்ளிகளின் கட்டட அமைப்பிற்கும், அவற்றின் பராமரிப்பு பணிகளுக்கும் மடானி அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தமிழ்ப்பள்ளிகளின் கட்டட மற்றும் சுற்றுப்புறத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் மடானி அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்பதற்கு மற்றொரு சான்று நெகிரி செம்பிலான், தம்பின், ரெப்பா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி ஒரு சான்றாகும்.
ஒற்றுமை அரசாங்கத்தின் நெகிரி செம்பிலான் மாநில அரசின் கீழ் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் வீரப்பன் சுப்பிரமணியத்தின் மூலமாகவும், மத்திய அரசாங்கத்தின் வாயிலாகவும் பள்ளியை மேம்படுத்துவதில் பள்ளி நிர்வாகம் வெற்றி பெற்றுள்ளது.

மடானி அரசாங்கத்தின் கீழ் உள்ள மக்கள் பிரதிநிதியும், பள்ளி நிர்வாகமும் இணைந்தால் மாணவர்களின் கல்வி, கற்றல், கற்பித்தல் தரத்தை உயர்த்துவதற்கு எத்தகைய அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு ரெப்பா தோட்ட தமிழ்ப்பள்ளி ஒரு சிறந்த உதாரணமாகும்.

கடந்த 1943 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மிக பழமையான தமிழ்ப்பள்ளியான ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தலைமையேற்ற தலைமையாசிரியர் திரு. வாசு கருப்பையா கூறுகையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் தனித்துவமாக கவனம் செலுத்தி வருவதை சுட்டிக்காட்டினார்.

ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் வீரப்பனுடன் பள்ளி நிர்வாகம் அணுக்கமாக கொண்டுள்ள ஒத்துழைப்பின் காரணமாக நல்ல வசதியுடன் 70 ஆயிரம் வெள்ளி செலவில் பள்ளி கழிப்பறை கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

46 மாணவர்கள் கொண்டுள்ள ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக்கு அடிப்படையாக தேவைப்படக்கூடிய விளையாட்டுப் பொருட்களை அடுக்கி வைப்பதற்கான அறை கட்டப்பட்டுள்ளது.

மனித வள அமைச்சின் மூலமாக 25 ஆயிரம் வெள்ளி செலவில் கருவூலம் அமைக்கப்பட்டதுடன், கால்வாய் விரிவுப்படுத்துதல் முதலிய பணிகள் நடைபெற்று, தற்போது நேர்த்தியாக காணப்படுகின்றன.

பள்ளியின் முன்புறம் முன்பு காடு போல் இருந்த பகுதிகள் தற்போது தார் போடப்பட்டு மிக விசாலமாக பகுதியாக மாற்றப்பட்டள்ளது ஆசிரியர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுதற்கும், மாணவர்கள் ஒன்றுகூடுவதற்கு தற்போது வசதியாக அமைந்துள்ளது..

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 85 விழுக்காட்டினர் B40 பிரிவைச் சேர்ந்த குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள் ஆவர். எனவே பள்ளிக்கு வேன் மூலம் வரக்கூடிய மாணவர்களில் சேர்ந்த 14 மாணவர்களுக்கு மாதத்திற்கு செலவிட வேண்டிய 80 வெள்ளி போக்குவரத்து கட்டணத்தில் பாதி கட்டணத்தை சட்ட மன்ற உறுப்பின்ர் வீரப்பன் ஏற்று இருப்பதையும் தலைமையாசிரியர் வாசு கருப்பையா சுட்டிக்காட்டினார்.

இந்த மாணவர்கள் அனைவரும் தாமான் டேசா பெர்மாய், தாமான் ரெப்பா பாரு, ஆயர் மாவாங் போன்ற பகுதிகளிலிருந்து வரக்கூடிய மாணவர்கள் ஆவர் என்று 58 வயதான தலைமையாசிரியர் வாசு கருப்பையா விளக்கினார்.

ரெப்பா தோட்டத்தமிழ்ப்பள்ளி, மாவட்ட அளவிலும் மாநில நிலையிலும் சதுரங்கம் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து சாதனைப்படைத்து வருவதையும் தலைமையாசிரியர் நினைவுகூர்ந்தார்.

தம்முடைய சேவை காலத்தில் பள்ளியின் அடிப்படைத் தரத்தை மேம்படுத்துவதில் இயன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அடுத்த வரக்கூடிய தலைமையாசிரியர்கள் பள்ளியின் தரத்தை மேலும் மேம்படுத்தி, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவார்கள் என்று வாசு கருப்பையா நம்பிக்கைத் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான், கெமஞ்சே, புக்கிட் கிளேடேக் தமிழ்ப்பள்ளி பிரதான சாலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் வீற்றிருக்கிறது. புக்கிட் கிளேடேக் தமிழ்ப்பள்ளிக்குச் செல்லும் 3 கிலோ மீட்டர் தூர குண்டும் குழியுமான செம்மண் சாலைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது இந்த குண்டும் குழியுமான செம்மண் சாலை தார் மற்றும் சிமெண்ட் கலந்த சாலையாக புதுப்பொலிவுடன் தற்போது காணப்படுகிறது. இதற்காக செலவிடப்பட்டத் தொகை 60 ஆயிரம் வெள்ளி முதல் 80 ஆயிரம் வெள்ளியாகும்

இந்த செம்மன் சாலையைத் தார் சாலையாக மாற்றி அமைக்க அரும்பாடுபட்டவர்களில் இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் மா. கணேசன் ஆவார். அவர் இப்பள்ளியில் போதித்த 7 மாதகாலத்தில் பல முயற்சிகளின்வழி இச்சாலைக்கு தீர்வு பிறந்துள்ளது.

இச்சாலையை சீரமைக்க பெரும் ஒத்துழைப்பு வழங்கிய தம்பின் மாவட்ட நீர்ப்பாசனம் மற்றும் வடிக்கால் இலாகா, ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான எஸ். வீரப்பன், கெமஞ்சே சட்டமன்ற உறுப்பினர் சுஹாமிசான், பள்ளி வாரியக்குழு தலைவர் தி. சஷிக்குமார், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ். நளினி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் நீர்ப்பாசனம் மற்றும் வடிக்கால் இலாகாவின் வாயிலாக தற்போது புக்கிட் கிளேடேக் தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கியுள்ள பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இப்படி தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கக்கூடிய ஒவ்வொரு பிரச்னையும் மடானி அரசாங்கம் ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டின் வழி தீர்வு காணப்பட்டு வருவது மூலம் தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

பல பள்ளிகள் தற்போது இணைக்கட்டடம் வசதியை பெற்றுள்ளன. பள்ளிகளின் புறப்பாட நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுதற்கும் உரிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

WATCH OUR LATEST NEWS