புத்ராஜெயா,அக்டோபர் 17-
முதல் பிரம்படித் தண்டனை நிறைவேற்றத்தில், அதன் கடுமையை தாங்கிக்கொள்ள இயலாமல் மயங்கி விழுந்த ஓர் இந்தியப்பிரஜையின் இதர 11 பிரம்படித் தண்டனை நிறைவேற்ற உத்தரவை கூட்டரசு நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
39 வயது நஜ்முதீன் அப்துக் காடே என்ற இந்தியப் பிரஜை செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு பிராசிகியூஷன் தரப்பினர் எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அந்த கைதியின் விண்ணப்பத்தை ஏற்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்றத் தலைவர் டான் ஸ்ரீ அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம் , தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக அந்த இந்தியப் பிரஜைக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை கடந்த 2023 ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம், 30 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனையாக குறைத்தது.