கோலாலம்பூர், அக்டோபர் 17-
பொது மக்களின் விபரக்குறிப்புகளை உள்ளடக்கிய தரவுகளை தலைக்கு ஒரு வெள்ளி 50 காசு முதல் 2 வெள்ளி வீதம் விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்றை OP கபாஸ் என்ற நடவடிக்கையின் மூலம் போலீசார் முறியடித்துள்ளனர்.
மலேசிய சைபர் செக்குரிட்டி ஆணையம் மற்றும் தனிநபர் தரவுகளை பாதுகாக்கும் ஆணையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் போலீசார், அந்த கும்பலின் நடவடிக்கையை முடக்கியுள்ளனர்.
மலேசிய மக்களில் 40 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சொந்தமான தரவுகளை கொண்டிருந்த dataserverl.mypsx.net என்ற சட்டவிரோத அகப்பக்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் தனிநபர்களின் தரவுகளை திருடும் இந்த கும்பலின் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றத்தடுப்பு இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.
இந்த தனிநபர் தரவுகளில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், MyKad எண், வீட்டு முகவரி, வங்கிக் கணக்கு எண் மற்றும் கைப்பேசி எண் முதலிய விவரங்கள் இருந்தது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் 34 க்கும் 52 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு மலேசியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தான் ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.