ஷா ஆலம், அக்டோபர் 17-
கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி கிள்ளானில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 12 வயது சிறுமியை கடத்திச்சென்ற கும்பலைச் சேர்ந்த ஒருவன், அந்த சிறுமியை விபச்சாரக் கும்பலிடம் விற்பனை செய்வதற்கு முயற்சி செய்து இருக்கிறான் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் அம்பலப்படுத்தினார்.
அந்த சிறுமி, அதே தினத்தன்று பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதிலும் இக்கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவ்விவகாரம் அம்பலமானதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த சிறுமி காணாமல் போன அடுத்த சில மணி நேரத்திலேயே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். இதன் காரணமாக அந்த சிறுமியை கடத்திச் செல்லும் அந்த கும்பலின் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ உசேன் உமர் கான் இதனை தெரிவித்தார்.