துப்பாக்கி வெளியே எடுக்கப்பட்ட விவகாரம், பெண் உட்பட மூவர் கைது

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 18-

Food Court உணவகத் தளத்தில் இரு ஆடவர்களுக்கு இடையில் நிகழ்ந்த வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவின் போது, ஒருவர் கைத்துப்பாக்கியை காற்சட்டையிலிருந்து எடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் AA அன்பழகன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சோங்கில் உள்ள Food Court உணவகத் தளத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பான 26 வினாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து அந்த மூவரும் அடையாளம் காணப்பட்டதாக அன்பழகன் குறிப்பிட்டார்.

அக்டோபர் 13 ஆம் தேதி இரவு 10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர், தனது உணவகத்தில் அமர்ந்திருந்த சந்தேகப்பேர்வழியிடம் சிகரெட் புகைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது

இதனால் அந்த கடைக்காரருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது வெள்ளைநிற டீ சட்டை அணிந்திருந்த நபர், இடுப்பின் காற்சட்டையிலிருந்து துப்பாக்கியை உருவியதாக கூறப்படுகிறது.

இந்த தகராற்றில் தலையிட்ட மாது ஒருவர், வெள்ளை நிற டி சட்டைக்காரரை பிடித்து, இழுத்து அங்கிருந்து அழைத்துச் செல்வதை அந்த காணொளி சித்திரிக்கிறது.

உள்ளூரைச் சேர்ந்த அந்த இரு ஆடவர்களும் நிரந்தர வசிப்பிடவாசியான அந்த மாதுவும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அன்பழகன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS