சுங்கை பூலோ , அக்டோபர் 18-
சிலாங்கூர், சுங்கைபூலோவில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் தனது காரிலிருந்து பிரம்பை எடுத்து, தனிநபரை தாக்கி ரகளைப் புரிந்ததாக நம்பப்படும் மாது ஒருவரின் அட்டகாச செயல் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு 7.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து அந்த எண்ணெய் நிலைய மேற்பார்வையாளர் போலீசில் புகார் செய்து இருப்பதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் ஹபீஸ் முஹமட் நோர் தெரிவித்தார்.
எண்ணெய் நிலையத்தின் ஒரு வாகனத்தின் பின்புறம் அந்த மாது தனது வாகனத்தை நிறுத்தியதால், அந்த வாகனமோட்டி வெளியேற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். அங்கிருந்த மற்ற வாகனமோட்டிகளும், அந்த மாதுவின் செயலைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர்.
இதனால் அங்கு ஏற்பட்ட சிறிய சலசலப்பைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த மாது, தனது வாகனத்திற்கு சென்று ஒரு பிரம்பை எடுத்து வந்து, எண்ணெய் நிலையப் பணியாளரை தாக்க முற்பட்டதாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக முகமட் ஹபீஸ் தெரிவித்தார்.