புக்கிட் செந்தோசா , அக்டோபர் 21-
மலேசிய இந்து சங்கம், புக்கிட் செந்தோசா வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் வசதிகுறைந்த மக்களுக்கும், சிறார்களுக்கும் தீபாவளி அள்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு, புக்கிட் செந்தோசாவில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவரும், உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் மூடா கட்சி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஆர். சிவபிரகாஷ் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினருக்கு தார்மீக ஆதரவை வழங்கும் நோக்கில் டாக்டர் சிவபிரகாஷ் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் ஏற்பாட்டாளர்களுன் இணைந்து சிறார்களுக்கு ரொக்கப்பணம் அன்பளிப்பையும் வழங்கினார்.

தீபாவளித் திருநாள் குதூகலத்தை வசதிகுறைந்த மக்களுடன் இணைந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் / ஒருவருக்கொருவர் உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்ற உன்னத நோக்கில் புக்கிட் செந்தோசா வட்டாரப் பேரவையினல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, சமூகத்தில் உள்ள இளம் தலைமுறையினரின் மீது அக்கறை செலுத்தும் மனப்பான்மையை காட்டுகிறது என்று டாக்டர் சிவபிரகாஷ் தமது உரையில் குறிப்பிட்டார்.

தவிர சமூகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள மக்களின் ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வின் முக்கியத்துவத்தையும் நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்வில், டாக்டர் சிவபிரகாஷ் மற்றும் டத்தோ மூர்த்தி கந்தையா போன்ற தலைவர்களின் வருகை, மக்களின் மத்தியில் உதவும் மனப்பான்மையையும், ஒற்றுமையையும் விதைப்பதில் அவர்கள் கொண்டுள்ள கடப்பாட்டை எடுத்துரைப்பதாக அமைந்தது.
