பினாங்கு , அக்டோபர் 21-
பினாங்கு, பிறை, தமன் இந்தரவாசிஹ் – யில் உள்ள Shan சிறார் ஆதரவற்ற இல்லத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி சனிக்கிழமை தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிறை சட்டமன்ற மக்கள் சேவை மையத்தின் ஒத்துழைப்புடன் Pertubuhan Wanita Mutiara என்ற மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்விற்கு பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் – வின் துணைவியார் திருவாட்டி டான் லீன் கீ மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ S. சுந்தராஜு சோமு ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தார.

இந்நிகழ்விற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வருகை புரிந்த டத்தோஸ்ரீ சுந்தராஜு, தீபாவளி குதூகலத்தை வரவற்கும் பொருட்டு பிரமாண்டமான முறையில் சிறார்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, தம்மை பிரமிக்க வைத்ததாக குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு ஒற்றுமையை மட்டும் விதைப்பதாக இல்லை, மாறாக, அவர்களின் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் தேவைகளையும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை தங்களுக்கு ஏற்படுத்தியதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில் வசதியான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையில் தமது சட்டமன்றத் தொகுதியான பிறையில் உள்ள Taman Inderawasih, Shan சிறார் ஆதரவற்ற இல்லத்தை மேம்படுத்திக்கொள்ளவும் / சிறார்களின் கல்வி மற்றும் கவனிப்பு முறையை வளப்படுத்திக்கொள்ளவும் 20 ஆயிரம் வெள்ளி நன்கொடையை வழங்குவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு அறிவித்தார்.
