பத்துமலை, அக்டோபர் 22-
ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூர் அமைப்பின் அன்பு கரங்களோடு தீபத் திருநாள் கொண்டாட்டம் எனும் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு, கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணி 2 முதல் மாலை 7 மணி வரை Batu Caves, Dewan Masyarakat Taman Batu Caves மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூர் அமைப்பின் தலைவர் மருதையா சுப்பிரமணியம் மற்றும் இதர பொறுப்பாளர்களின் மிகுந்த ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் வசதிகுறைந்த 100 பேர் முதல் 120 பேர் வரையில் தீபாவளி அன்பளிப்பு கூடைகள் வழங்கப்பட்டன.

கடந்த சில ஆண்டு காலமாக வசதி குறைந்த மக்களுக்கு உதவுவதிலும், மாணவர்களுக்கு சமய நன்னெறி பண்புகளை ஊக்குவிக்கும் பட்டறைகளை நடத்துவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூர் அமைப்பு தீபாவளி திருநாளில் வசதி குறைந்தவர்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்ற ஓர் உன்னத நோக்கில் உதவிப் பொருட்கள் வழங்குதல், அதிர்ஷ்ட குலுக்கல் உட்பட பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் Tan Kumar விவரித்தார்.

நிகழ்விற்கு தலைமையேற்ற பிரதமரின் அரசியல் செயலாளர் Datuk Azman Abidin- னின் சிறப்பு அதிகாரி Jonathan Vela, “அன்பு கரங்களோடு தீபத் திருநாள் கொண்டாட்டம்” எனும் இந்நிகழ்வை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூர் அமைப்பின் பொறுப்பாளளர்களுக்கு தமது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் நன்கொடைகளை வழங்கி உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் அமைப்பின் நிர்வாகக்குழு சார்பில் Tan Kumar தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
