ரவாங், அக்டோபர் 23-
ரவாங், கம்போங் புங்க ராய-வில் 2 வயது குழந்தையை கடத்த முயற்சி செய்ததாக நம்பப்படும் நேபாளப் பிரஜை ஒருவரை பொது மக்கள் வளைத்துப்பிடித்து கட்டிப்போட்டனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை நிகழ்ந்ததாக நம்பப்படும் இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நேபாள பிரஜையை வளைத்துப்பிடிக்கும் முயற்சியில் அந்த நபருக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்ப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று மதியம் 12.40 மணியளவில் 47 வயதுடைய நபரிடமிருந்து போலீஸ் புகார் ஒன்றை தங்கள் பெற்றதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் Superitendan முகமட் ஹபிஸ் தெரிவித்தார்.
தனது அண்டை வீட்டில் பலத்த சத்தம் கேட்டு, உதவிகோரி தாம் சென்ற போது, சம்பந்தப்பட்ட நேபாள பிரஜை, அந்த 2 வயது குழந்தையை தூக்கிகொண்டு தப்பிக்க முயற்சித்தாகவும், பின்னர் ஓரிட மக்களின் உதவியுடன் அந்த நபரை சுமார் 500 மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று பிடித்ததாகவும் அந்த நபர் புகார் அளித்துள்ளார்.
துப்புரவு பணியாளரான அந்த நபர் பொது மக்களால் வளைத்துப்பிடிக்கப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்டு, போலீசாரிடம் ஒப்டைக்கப்பட்டதாக Superitendan முகமட் ஹபிஸ் குறிப்பிட்டார்.
குழந்தை கடத்தல் முயற்சியில் அந்த நேபாளப் பிரஜை தனியொரு நபராக செயல்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 511 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.