மித்ராவிற்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு மறுபரிசீலனை செய்வீர்

கோலாலம்பூர், அக்டோபர் 23-

இந்தியர்களின் சமூகவியல் உருமாற்றுப்பிரிவான மித்ராவிற்கு 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Batu எம்.பி. P. பிரபாகரன் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

மலேசிய இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார நிலையை உயர்த்துவதை நோக்கமாக கொண்ட இந்த நிதி, இந்தியர்களின் மேம்பாட்டிற்கு மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகளுக்கு போதுமானதாக இல்லை என்று மித்ரா சிறப்புப்பணிக்குழுவின் தலைவருமான பிரபாகரன் வாதிட்டார்.

இந்திய சமுதாயத்திற்காக மித்ராவிற்கு ஒதுக்கப்பட்ட இந்த 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் ஓர் உச்ச வரம்பாக கருதக்கூடாது. ஆனால், இந்திய சமூகத்தில் ஓர் அர்த்தம் பொதித்த மாற்றத்தைக் காண்பதற்கும், ஏற்படுத்துதற்கும் இந்த 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை ஒரு தொடக்கப்புள்ளியாக கருத வேண்டும் என்று பிரபாகரன் வலியுறுத்தினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட பிரபாகரன், இந்திய சமுதாயத்திற்கு மித்ரா வாயிலாக கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியத்தையும் தமது உரையில் வலியுறுத்தினார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக மித்ராவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இந்திய சமூகத்திற்கு உண்மையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை அரசாங்கம் ஆதரிப்பதற்கு மித்ராவிற்கு ஒதுக்கப்பட்ட இந்த 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரபாகரன் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS