பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 24-
துருக்கி தலைநகர் Ankara-வில் உள்ள ஒரு விமான நிறுவனத்தின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Ankara- விலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Kahramankazan என்ற இடத்தில் உள்ள Turkish Aerospace Industries தலைமையகத்தில் நடந்த இந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் எந்தவொரு மலேசியரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் குர்திஷ் புரட்சிக் குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்துப் பல வீடியோக்கள் வெளியாகின. அந்த விமான நிறுவனத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருப்பதை அந்த வீடியோக்களில் காண முடிந்தது.